தமிழறிஞர்கள் கோரிக்கையை ஏற்று 'தமிழ்நாடு நாள்' அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அண்மையில் தமிழக அரசு ஜூலை 18 ஆம் தேதியை 'தமிழ்நாடு நாள்' என அறிவித்திருந்தது. இதுகுறித்து பல்வேறு மாறுபட்ட கருத்துகள் நிலவிவரும் நிலையில், தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அமைப்புகளின் கோரிக்கை படியே ஜூலை 18 தமிழ்நாடு நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, ''எல்லை போராட்ட தியாகிகளைக் கவுரவிக்கும் நாளாக நவம்பர் 1ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். ஓபிஎஸ்-க்கு திடீரென்று ஞானோதயம் பெற்றுவருவதைப் போல் எழுவதைப் பார்க்கும்போது வியப்புதான் ஏற்படுகிறது. மெட்ராஸ் மாகாணம் 'தமிழ்நாடு' என மலர்ந்த நாளே பொருத்தமாக இருக்கும் என அறிஞர்கள் கூறினர். 1956 நவம்பர் 1ல் மொழிவாரி மாநிலங்கள் அமைந்தபோது தமிழர் வாழும் அனைத்து பகுதிகளும் தமிழகத்திற்குக் கிடைக்கவில்லை. எதைச் செய்தாலும் சிறந்த சான்றோர்களோடு ஆலோசித்து திமுக அரசு செய்து வருகிறது. சிலருக்கு இல்லாத ஒன்றை இட்டுக்கட்டிச் சொல்ல வேண்டிய தேவைகள் இருக்கலாம்'' எனத் தெரிவித்துள்ளார்.
''ஒரு குழந்தை என்றைக்குப் பிறக்கின்றதோ அந்த நாள்தான் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுமே தவிர ஒரு பெண்ணினுடைய கருப்பையில் குழந்தை உருவாகிய நாளை குழந்தை பிறந்த நாளாக எடுத்துக்கொள்ள முடியாது'' என்று ஜூலை 18-ஐ தமிழ்நாடு தினமாக அறிவிக்கப்பட்டதற்கு ஓபிஎஸ் விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.