Skip to main content

'அது மனிதர்களை மிருகமாக மாற்றுகிறது;25 ஆம் தேதிக்குள் மாற்றுத்திட்டம் வேண்டும்'-பாமக ராமதாஸ் வலியுறுத்தல்  

Published on 20/04/2022 | Edited on 20/04/2022

 

 'It turns humans into beasts; change plan needed by 25th' -pmk Ramadas insists

 

மலைகளில் மதுக்கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிகையை வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் மது அருந்தி விட்டு காலி பாட்டில்களை  காட்டுக்குள் வீசுவதால் வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க மாற்றுத் திட்டத்தை வரும் 25-ஆம் தேதிக்குள் தயாரிக்க வேண்டும்; இல்லாவிட்டால் மலைப் பகுதிகளில் மதுக்கடைகளை மூட ஆணை பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது ஆகும்.

 

மலைப் பகுதிகளில் வன உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மது வணிகத்தின் மூலம் லாபம் ஈட்டும் டாஸ்மாக் நிறுவனம், வன உயிரினங்களின் நலனிலும் அக்கறை காட்ட வேண்டும் என்றும் கண்டித்தனர். காலி மது பாட்டில்கள் வன விலங்குகள் நடமாடும் பகுதிகளில் வீசப்படுவதை தடுக்கும் வகையில், மலைப் பகுதிகளில் மட்டும் காலி மதுபாட்டிகளை வாங்குவதற்கு மையங்களைத் திறக்கலாம் என்றும், அந்த மையங்களில் காலி பாட்டில்களை வழங்குவோருக்கு ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வீதம் ஊக்கத்தொகை வழங்கலாம் என்றும் யோசனை தெரிவித்த நீதிபதிகள், அதை செயல்படுத்துவது பற்றி 25-ஆம் தேதிக்குள் முடிவெடுக்கும்படி டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

 

மலைப்பகுதிகளில் வன விலங்குகள் நடமாடும் பகுதிகளில் காலி மது பாட்டில்கள் வீசப்படுவதை தடுக்க வேண்டும் என்பதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது. ஆனால்,  அவர்கள் தெரிவித்துள்ள மாற்றுத் திட்டமோ, வேறு எந்த மாற்றுத் திட்டங்களோ வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்காது என்பது தான் எதார்த்தம் ஆகும். காலி மது பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் ரூ.10 என்பது கவர்ச்சிகரமான அறிவிப்பாகத் தோன்றலாம்; ஆனால், மது குடித்த பிறகு மனிதர்கள் மனிதர்களாக இருப்பதில்லை.... காலி மது பாட்டில்களை ஒப்படைத்து ரூ.10 பெறலாம் என்ற மனநிலையிலும் அவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது தான் உண்மையாகும். அதிகாரப்பூர்வ விலையை விட ரூ.30 - 40 வரை, குறிப்பாக மலைப் பகுதிகளில் இன்னும் கூடுதல் விலை கொடுத்து மதுவை வாங்குபவர்களுக்கு, அதை திரும்பக் கொடுத்து விட்டு பணம் பெறும் எண்ணம் தோன்றாது.

 

மது போதை கோழைகளுக்கும் பொய்யான துணிச்சலைக் கொடுக்கிறது; அது மனிதர்களை மிருகமாக மாற்றுகிறது. அதனால், அந்த நேரத்தில் சாகசங்களை செய்து தங்களின் வீரத்தை வெளிப்படுத்துவதற்கு தான் மது குடித்த மனித மிருகங்கள் முயலும். அதனால், மது போதையில் காலி பாட்டில்களை உடைத்து சேதப்படுத்துவதற்கு தான் அவர்கள் துடிப்பார்களே தவிர, வன விலங்குகளுக்கு பாதிப்பைத் தடுக்கும் வகையில் காலி பாட்டில்களை அதற்கான மையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள்.

 

tasmac shop

 

காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் யோசனையை டாஸ்மாக்கிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தெரிவித்ததே நீலகிரி மாவட்ட நிர்வாகம் தான். ஆனால், அந்தத் திட்டம் நடைமுறைக்கு ஏற்றது அல்ல என்று அதே மாவட்ட நிர்வாகம் இப்போது தெரிவித்துள்ளது. இத்திட்டம் தொடர்பான உயர்நீதிமன்ற வினாவுக்கும் பதில் அளிக்கும் போது இந்த விஷயங்களை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

 

தமிழ்நாட்டில் 2021-ஆம் ஆண்டில் மட்டும் 101 யானைகள் உயிரிழந்துள்ளன. நடப்பாண்டில் மார்ச் 15-ஆம் தேதி வரையிலான 75 நாட்களில் மட்டும் 30 யானைகள் உயிரிழக்கின்றன. கடந்த ஆண்டில் மூன்றரை நாட்களுக்கு ஒரு யானையும், நடப்பாண்டில் இரண்டரை நாட்களுக்கு ஒரு யானையும் உயிரிழக்கின்றன. இவை அனைத்துக்கும் காலி மது பாட்டில்கள் காரணம் அல்ல... வேறு பல காரணங்கள் உள்ளன என்றாலும் கூட, யானைகள் உள்ளிட்ட உயிரினங்களை பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகள் தேவை என்பதற்காகவே இந்த புள்ளி விவரத்தை தெரிவிக்கிறேன். யானை வரும் பாதையில் ஒரே ஒரு காலி பாட்டில் கிடந்தாலும் கூட, அதை யானை மிதிக்கும் போது அது உடைந்து காலில் குத்தினால், அதன் மூலம் யானைக்கு புண் ஏற்பட்டு சீழ் பிடித்து அடுத்த 3 மாதங்களில் உயிரிழந்து விடுவதாக  கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நிலை தொடருவதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது.

 

காட்டுப் பகுதிகளில் காலி பாட்டில்கள் வீசப்படுவதை தடுப்பதற்கான மாற்றுத் திட்டங்கள் பயனளிக்காது என்ற சூழலில், அந்தப் பகுதிகளில் மதுக்கடைகளை மூடுவது தான் சரியான தீர்வாக இருக்கும். அதனால் டாஸ்மாக் நிறுவனத்திற்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படப்போவதில்லை. அதனால், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளிலும், சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப்பகுதிகளிலும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட அரசு ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, அப்பகுதிகளுக்கு வெளியிலிருந்து மது பாட்டில்கள் கொண்டு செல்லப்படுவதையும் தமிழக அரசு தடுக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.