
புதுச்சேரியிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. அங்குள்ள 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை 16-ந் தேதி நடத்தினார் சீமான். மேடையிலும் சரி, பொதுக் கூட்டத்திலும் சரி, மிகப் பெரிய ஒழுங்கினை கடைப்பிடித்தனர் நாம் தமிழர் கட்சியினர். வேட்பாளர்களை அறிமுகப்படுத்திவிட்டுப் பேசிய சீமான், "பாஜகவிற்கு மூன்றே மூன்று தான் அரசியல். பாகிஸ்தான், பசுமாடு, ஜெய் ஸ்ரீ ராம் கோஷம். இந்த மூன்றும் தான் அவர்களுக்கு அரசியல்.
ஏற்கனவே 7 ஆண்டுகள் நாட்டை சீரழித்துவிட்டார்கள். இங்கு வந்து என்ன செய்து விடப்போகிறார்கள்? காங்கிரசும் பாஜகவும் தமிழகத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் எதற்கு? என் மொழிக்காக நிற்பார்களா? என் வளத்திற்காக நிற்பார்களா? என் உரிமைகளுக்காக நிற்பார்களா? எதுவுமில்லை.
பாஜகவுக்கும் காங்கிரசிற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. இருவரின் பொருளாதார கொள்கை, வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு கொள்கை எல்லாம் ஒன்றுதான். காங்கிரஸ் என்பது கதர் கட்டிய பாஜக; பாஜக என்பது காவி கட்டிய காங்கிரஸ். அவர்கள் பாபர் மசூதியை இடிப்பார்; இவர்கள் அதை அனுமதிப்பார்கள். அவர்கள் ராமர் கோவில் கட்டுவார்கள்; இவர்கள் அதற்கு வாழ்த்து சொல்லுவார்கள்.
இந்த ஆட்சியாளர்கள் அனைவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. மாநில முதலமைச்சர் இந்திய அளவிலான தரகர். பிரதமர் சர்வதேச அளவிலான தரகர். சமீபகாலமாக, பிரதமர் மோடி நாம் பேசும் தற்சார்பினையைப் பேசுகிறார். ஆனால் அவர் உண்மையில் பேசுவது தனி நபர் சார்பு. அனைத்தையும் அம்பானிக்கும் அதானிக்கும் கொடுத்து விடுவதற்குப் பெயர்... தற்சார்பு அல்ல; தனி நபர் சார்பு!
என் வேட்பாளர்கள் எல்லாம், சின்ன பசங்களா இருக்காங்கன்னு நினைக்கிறார்கள். ராணுவத்துக்கு எப்படி ஆள் எடுக்குறாங்க? 18-22 வயசுலதான எடுக்குறாங்க. அப்படிதான் மக்கள் ராணுவத்திற்கு நானும் ஆள் எடுக்குறேன்" என்றார் சீமான் மிக ஆக்ரோஷமாக.