Skip to main content

“எது வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்!” -அமைச்சரின் உத்தரவால் தாக்கப்பட்ட தேர்தல் அதிகாரி!

Published on 03/04/2018 | Edited on 03/04/2018
election

 

“இங்கே எவன்டா தேர்தல் அதிகாரி?”
“என்ன மிஸ்டர்? நான்தான்!”
“என்னாது மிஸ்டரா? அடிடா இவனை..”

திமுதிமுவென்று தேர்தல் அலுவலகத்துக்குள் நுழைந்த ஏழு பேரும் ரவுண்டு கட்டி,  தேர்தல் அதிகாரியை அடிக்க ஆரம்பித்தார்கள்.  அவர், விழுந்தடித்து அலுவலகத்திலிருந்து வெளியே ஓடுகிறார். அவரிடம் காக்கிகள் “என்ன சார்?” என்று கேட்க, “உங்க கண்ணு முன்னாலதான அடிக்கிறாங்க..” என்று அவர் பரிதவிக்க, மேலும் அடி விழுகிறது. காக்கிகள் அந்த 7 பேரைத் தடுக்காமல், தேர்தல் அதிகாரியிடம் “நீங்க கம்ப்ளைண்ட் எழுதிக் கொடுங்க..” என்கிறார்கள்.  

 

ராஜபாளையம் அருகிலுள்ள R77 சத்திரப்பட்டி கூட்டுறவு பண்டக சாலைக்கான தேர்தல் நடந்தபோது, அதிமுக அணியின் முத்துகணபதி தலைவராக வேண்டும் என்ற வெறியோடு, குண்டர்கள் 7 பேர் அலுவலகத்துக்குள் நுழைந்து, சேர்களை உடைத்து, தேர்தல் அதிகாரி மான்ராஜை தாக்கிய சம்பவம்தான் மேலே விவரிக்கப்பட்டிருக்கிறது. 

pon

 

அதிமுக குண்டர்கள் அத்தோடு விடவில்லை.  அந்தப் பண்டகசாலையின் தலைவராக தொடர்ந்து இருந்து வரும் சிபிஐ கட்சியைச் சேர்ந்த சுந்தரராஜனையும், “நீ எப்படிடா அணி சேர்த்து போட்டியிடலாம்?” என்று  தாக்கினார்கள்.   

 

அதிமுக அணியைச் சேர்ந்த 11 பேரின் பெயர்களை மட்டும் நோட்டீஸில் ஒட்ட வேண்டும் என்று அதிமுகவினர் மிரட்டியும்,  நேர்மையான அதிகாரி என்று சொல்லப்படும் தாசில்தார் மான்ராஜ், நியாயமாகத் தேர்தல் நடத்த முயன்றார். அதனால்தான்,  தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். எல்லாம் முடிந்தபிறகு, கண்துடைப்பாக, காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தியது.  சிபிஐ கட்சியைச் சேர்ந்த சுந்தரராஜன்,  ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். 

 

“விருதுநகர் மாவட்டத்தில், அதிமுகவினர் தவிர, டிடிவி தினகரனின் அமமுகவோ, திமுகவோ, காங்கிரஸோ, கம்யூனிஸ்ட்டோ, வேறு எந்தக் கட்சியினரும் கூட்டுறவு சங்கத் தேர்தலில் போட்டியிடக் கூடாது. நம்மை மீறி போட்டியிட்டால், என்ன செய்தாவது,  அவர்களை விரட்டியடிக்க வேண்டும். எது வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன்.’ என்று விருதுநகர் அதிமுக மா.செ.வும் மந்திரியுமான கே.டி.ராஜேந்திரபாலாஜி போட்ட உத்தரவால்தான், இப்படி ஒரு வெறித்தனமான தாக்குதலை அதிமுகவினர்  நடத்தியிருக்கிறார்கள்.” என்று ஆதங்கத்துடன் சொன்னார்கள் சிபிஐ தோழர்கள். 

 

தமிழ்நாட்டில் கூட்டுறவுத் தேர்தலை இத்தனை கேலிக்கூத்தாக்கி விட்டார்களே!

சார்ந்த செய்திகள்