கொரோனாக்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனக் கேட்டால் பழையதைப் பேசுகிறார்கள் என திமுக மீது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக ஜனநாயகத்தை மதித்தால் தானே மற்றவர்கள் மதிப்பார்கள். இவர்கள் மதிக்கிறார்களா? பிரதான எதிர்க்கட்சியின் தலைவர் சட்டமன்றத்தில் நாட்டு மக்களின் பிரச்சனைகளை எடுத்துப் பேசும் போது அதை ஒலிபரப்பு செய்வது கிடையாது. நாங்கள் சொல்வதையெல்லாம் நீக்கிவிடுகிறார்கள். இவர்கள் எங்கு ஜனநாயகத்தை கடைபிடித்தார்கள். இவர்களுக்கு அந்த தகுதி இல்லை.
அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பொழுது கடுமையான மின்வெட்டு இருந்தது. மின்துறைகளில் இருக்கும் குறைகளை எல்லாம் சரிசெய்து தடையில்லா மின்சாரத்தை கொடுத்தார்கள். ஜெயலலிதா இருக்கும் போதும் சரி அவரது மறைவிற்குப் பின்பும் தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரத்தை கொடுத்துக்கொண்டு இருந்தோம். எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின்தட்டுப்பாடு ஏற்படும்.
நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. கோவையிலும் சென்னையிலும் இறந்துள்ளார்கள். இதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனக் கேட்டால் பழசை பேசிக்கொண்டுள்ளார்கள். இப்பொழுது உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு என்ன எனக் கேட்டால் பதில் இல்லை. அரசாங்கம் செயல்படவில்லை என சொன்னால் அதை நீக்கிவிடுவார்கள்” எனக் கூறினார்.