“என் கட்சி திமுக. என் தலைவர் கலைஞர். என்னை வாழ வைத்த தெய்வம் எம்.ஜி.ஆர் என எம்.ஜி.ஆரிடமே சொன்னேன்” என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “நான் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தவன். எங்கள் ஊரில் சாலை, பள்ளிக்கூடம் கிடையாது. மின்சாரம், குடிநீர் கூட கிடையாது. அந்தக் கிராமத்தில் பிறந்த நான்தான் எம்.எல்.ஏ ஆகி சாலை போட்டேன், பள்ளிக்கூடம் கட்டினேன், மின்சாரம் கொண்டுவந்தேன். அத்தகைய குக்கிராமம். அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் அதன்பின் என்னை முதல்வர் அமர வைத்துள்ளார்.
எம்.ஜி.ஆர் தனியாகக் கட்சி துவங்கிய போது பலர் அவர் பின் போய்விட்டனர். ஆனால், எம்.ஜி.ஆர் மடியில் வளர்ந்தவன் நான். ஆறு, ஏழு ஆண்டுக்காலம் என் படிப்புச் செலவை முன்னின்று ஏற்றுக்கொண்டவர் அவர். ஆனால், அவர் முதல்வராக இருந்தபோது சட்டமன்றத்தில் அவரது அறைக்கு அழைத்தார். சென்றேன். நான் என்ன சொன்னாலும் செய்வாயா எனக் கேட்டார். செய்கிறேன் எனச் சொன்னேன்.
சட்டமன்றத்தில் நான் உட்காரும் இடத்தின் அருகே உட்கார். நான் வந்து உன்னை என்ன மந்திரி எனச் சொல்கிறேன் என்றார். அது மட்டும் முடியாது எனச் சொன்னேன். அது ஏன் எனக் கேட்டார். என் கட்சி திமுக. என் தலைவர் கலைஞர். என்னை வாழவைத்த தெய்வம் நீங்கள் என்றேன். இதைக் கேட்டதும் எம்.ஜி.ஆர் என்னைக் கெட்டியாக அணைத்துக் கொண்டார்” என துரைமுருகன் கூறினார்.