அதிமுகவுக்கு நாடாளுமன்றத் தேர்தலிலோ, இடைத்தேர்தலிலோ ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டு எத்தனை தொகுதிகள் கிடைத்தாலும், அந்த வெற்றிக்கான காரணங்கள் எடப்பாடி பழனிசாமிதான் என்று அக்கட்சியினரால் பேசப்படும். ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை தேனி நாடாளுமன்றத் தொகுதியோடு, ஆண்டிப்பட்டி மற்றும் பெரியகுளம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால்தான் அவரது அரசியல் அடுத்தடுத்து புயலை கிளப்பும். தேனியில் அசைக்க முடியாத அதிமுக புள்ளியாக திகழ்வார். அதிமுகவில் அவரது கை ஓங்கும்.
தேனி நாடாளுமன்றத் தொகுதி, ஆண்டிப்பட்டி மற்றும் பெரியகுளம் ஆகிய இரண்டு தொகுதிகளில் தோல்வி அடைந்தால் அக்கட்சியினராலேயே கடும் விமர்சினத்திற்குள்ளாவார். அதேநேரத்தில் இரண்டு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தோல்வியடைந்து, தேனி பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால், மகனை வெற்றி பெறவைக்கவே பாடுபட்டார், கட்சியினரை மறந்துவிட்டார் என்று மேலும் அவரது மீதான விமர்சனங்கள் அதிகரிக்கும்.
தர்மயுத்தம் நடத்திய காலத்தில் அவரோடு இருந்த எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் சிபாரிசு செய்த யாருக்கும் வேட்பாளர் சீட் வாங்கிக்கொடுக்க ஓ.பன்னீர்செல்வம் முயற்சி செய்யவில்லை. ஆகையால் அவர்கள் யாரும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் ஓ.பன்னீர்செல்வத்துக்காக பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை.
இதனிடையே ஓ.பி.எஸ். எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டால் அவர் பாஜகவில் சேருவார் என்று செய்திகள் பரவியது. அதற்கேற்றால்போல் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தனது மகனுடன் வாரணாசி சென்ற ஓ.பி.எஸ்., நரேந்திர மோடி வேட்புமனு தாக்கலில் பங்கேற்று, தனது மகன் வெற்றி பெற வாழ்த்தும் பெற்று வந்தார். அவரது வாரணாசி பயணம் பாஜகவில் இணைவதுதான் என்றும், தனது மகனை வெற்றிபெற வைக்கவே என்றும் எதிர்க்கட்சிகள் கூறி வந்தன.
தேனி நாடாளுமன்றத் தொகுதியிலும், ஆண்டிப்பட்டி மற்றும் பெரியகுளம் ஆகிய இரண்டு தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுவிட்டால் தேனியில் அசைக்க முடியாத அதிமுக புள்ளியாக திகழ்வார் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் பின்னடைவு ஏற்பட்டால் கட்சியில் அவர் மேலும் வளர முடியாது என அவரது கட்சியினரே கூறுகின்றனர்.
தர்மயுத்தம் நடத்திய காலத்தில் தனக்கு இருந்த செல்வாக்கு தற்போது இல்லை என்பதையும், அப்போது தன்னோடு இருந்தவர்கள் தற்போது இல்லை என்பதையும் உணர்ந்த ஓ.பன்னீர்செல்வம் மே 23ஆம் தேதி முடிவுகளை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார். அன்றைய முடிவுதான் அதிமுகவில் அவரது கை ஓங்குமா? அல்லது மீண்டும் வாரணாசி பயணம் தொடருமா? என்பதை தீர்மானிக்கும் என்கிறார்கள் விமர்சகர்கள்.