இன்று நாமக்கல் மாவட்டம் புதன்\சந்தையில் உள்ளாட்சியில் நல்லாட்சி-திமுகவின் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை தமிழகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''பள்ளி படிப்பைவிட அரசியல் படிப்புதான் தனக்கு அதிக ஆர்வத்தைத் தூண்டியது. மக்கள்பணி செய்யவந்த தனக்கு முதலில் சிறையும், வேதனையும்தான் கிடைத்தது. பொறுப்புகள் உடனடியாக கிடைத்து விடாது பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். பதவிகளுக்கு வருவது முக்கியமல்ல பொறுப்புகளை தக்க வைத்துக் கொள்வதுதான் கடினம். பெண்கள் தங்கள் பதவிக்கான பொறுப்புகளை கணவரிடம் தந்து விடக்கூடாது. மாநகராட்சி மேயர் முதல் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் வரை அனைவரும் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். அதுதான் இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கம். புதிதாக பொறுப்புக்கு வந்திருக்கக்கூடிய பெண்களுக்கு பயமோ, கூச்சமோ, தயக்கமோ இருக்கக் கூடாது. தரப்பட்ட பொறுப்பை நேரடியாக நீங்களே கையாள வேண்டும். உங்களுக்கு தரப்பட்ட பொறுப்புகளை உங்கள் கணவரிடம் நீங்கள் ஒப்படைத்து விடக்கூடாது. நிமிர்ந்த நன்னடை... நேர்கொண்ட பார்வை... நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள் கொண்டவர்களாக தன்னிச்சையாகச் செயல்பட வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது சட்டப்படி விதிமுறைப்படி, நியாயத்தின்படி மக்களுக்காக நடந்து கொள்ள வேண்டும். இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நான் கடுமையாக எச்சரிக்கிறேன். ஒலுங்கீனமும், முறைகேடும் தலைதூக்கினால் நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன். இது உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மட்டுமல்ல இங்குள்ள அனைவருக்கும் இதனை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்'' என்றார்.