நிலுவையிலுள்ள 4 சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகளில் திமுகவினர் கவனம் செலுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து வெற்றிக் கணக்குகளை போட்டு வருகிறார்கள் திமுக சீனியர்கள். எம்.பி.தொகுதிகளில் திமுக கூட்டணி 35 இடங்களையும் இடைதேர்தல் தொகுதிகளில் முழுமையாகவும் கைப்பற்றும் என சொல்லி வருகிறார்கள். இதனால் வெற்றிப்பெறப்போகும் எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் இப்போதே கனவுலகில் மிதக்கின்றனர்.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தால் எத்தனை கேபினெட் அமைச்சர் வாங்க வேண்டும் ? எந்தெந்த இலாகாக்களை கேட்டு பெற வேண்டும்? என்பது தொடங்கி எந்த திசையிலுள்ள பங்களாக்களில் குடியேற வேண்டும் என்பது வரை இப்போதே விவாதிக்கத் துவங்கியுள்ளனர். சீனியர்களுக்கு இணையாக திமுகவின் கிச்சன் கேபினெட்டும் ஏகப்பட்ட கணக்குகளை கூட்டிக்கழித்துப் போட்டு வருகிறது.
இது ஒருபுறமிருக்க, மே 23-க்கு பிறகு ஆட்சி மாற்றம் அமையவிருக்கிறது. முதல்வராகவிருக்கிறார் மு.க.ஸ்டாலின் என்கிற குரல் அறிவாலயத்தில் எதிரொலிக்கிறது. இதன் உச்சக்கட்டமாக, எந்த தேதியில் தலைவர் பதவியேற்றால் நல்லது என்பது உள்பட விவாதிக்கிறார்கள்.