சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், 2023 - சர்வதேச புத்தகக் கண்காட்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார். இந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்த புத்தகக் கண்காட்சி அரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த புத்தகக் கண்காட்சியில் முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சிறந்த பதிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அந்நாடுகளில் அங்கு இருக்கக்கூடிய சிறந்த மொழிகளில் சிறந்த பதிப்புகள் இங்கு இடம்பெறும்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “இந்த கண்காட்சியில் 30 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துள்ளனர். வரும் காலங்களில் கலந்து கொள்ளும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது விற்பனைக்காக தொடங்கப்பட்ட கண்காட்சி அல்ல. தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் இது நடைபெறும். தமிழில் சிறந்த 30 முதல் 50 புத்தகங்களை வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்க அந்நாட்டு பதிப்பாளர்கள் முன்வருவார்கள்.
அதேபோல் மற்ற நாடுகளில் சிறப்பாக உள்ள பதிப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கலை முன்னிட்டு புதன்கிழமை விடுமுறையா எனக் கேட்கின்றனர். அம்மாதிரியான அறிவிப்புகள் எதையும் அரசு வெளியிடவில்லை” எனக் கூறினார்.