சங்பரிவாரின் போலித்தனமான ஏஜெண்டாக ஆளுநர் செயல்படுவதாக மதிமுக தலைவர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டி சங்கரலிங்கனார் 76 நாட்கள் விருதுநகரில் உண்ணாநோன்பு இருந்து தன்னுயிரைத் தந்தார். நாடாளுமன்றத்தில் புபேஷ் குப்தா மசோதா கொண்டு வந்தார். அதை திமுக ஆதரித்தது. அதன் பிறகு பேரறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனவுடன் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு எனப் பெயர் வைக்க வேண்டும் என்று இலக்கியங்களில் இருந்து எல்லாம் உதாரணங்களை எடுத்துச் சொன்னார்.
தமிழ்நாடு என்பது இலக்கியங்களில் இருக்கிறது. பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் எல்லாம் தமிழ்நாடு என்று தான் இருக்கிறது. ஆகவே, இந்தப் பெயரை எல்லோரும் ஏற்றுக்கொண்டு, ‘நான் தமிழ்நாடு என்று சொல்வேன். நீங்கள் வாழ்க என்று கூற வேண்டும்’ என்று அண்ணா சொல்ல, அனைத்துக் கட்சித் தலைவர்களும்; அனைத்து உறுப்பினர்களும் அறிஞர் அண்ணா சொன்னதை ஏற்றுக்கொண்டு, ‘தமிழ்நாடு’ என்று அண்ணா சொன்னால், ‘வாழ்க! வாழ்க! வாழ்க!’ என மூன்று முறை சொன்னார்கள்.
அப்படி அதற்கு ஒரு பெரிய வரலாறு இருக்கிறது. இந்த வரலாறு எல்லாம் தெரியாமல் ஆளுநர் புதிய குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறார். அதுமட்டுமல்ல, இதற்குப் பின்னால் சங்பரிவார் சக்திகள் அவரை இயக்கிக் கொண்டு இருக்கிறது. அவர்களுடைய கருவியாக; போலித்தனமான ஏஜென்டாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு என்ற பெயரை யாரும் மாற்ற முடியாது. அது சரித்திரத்தில் இடம்பெற்றது; தியாகத்தாலே சூட்டப்பட்ட பெயர். அவர் பெயரை மாற்றிக்கொண்டால் மிக நல்லது” எனக் கூறினார்.