கடந்த சில மாதங்களாக அதிமுகவில் நிகழ்ந்து வந்த ஒற்றைத்தலைமை விவகாரத்தில், பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால், அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கியதும், அவரை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கி அவருக்கு பதில் ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டதும் செல்லும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறி வருகின்றனர். தீர்ப்பிற்கு முன்பே சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து மனு கொடுத்திருந்தனர்.
இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவுவிடம் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை யாருக்கு? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அப்பாவு, “இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு கூறியுள்ளது. அதற்குள் செல்ல விரும்பவில்லை. நீதிமன்றத்தின் அடிப்படையில் சட்டமன்றம் செயல்படுவது இல்லை. சட்டமன்றம் தனித்தன்மை வாய்ந்தது. சட்டமன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் அல்லது சட்டமன்றத்தில் நடைமுறைப்படுத்துவது குறித்து எல்லாமே சட்டப்பேரவை தலைவருடைய முழுப் பொறுப்பாகும். அதனால் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்கும் சட்டமன்றத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.