திமுக அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை விடுவித்து தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் இன்று சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் டிசம்பர் 21ல் பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரில் அல்லது காணொளி வாயிலாக ஆஜராக வேண்டும் என நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்தனர். நீதிபதி முன் நின்ற பொன்முடி மற்றும் அவர் சார்பிலான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, பொன்முடி மற்றும் அவரது மனைவியின் வயது, மருத்துவ காரணங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்து மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதனைத்தொடர்ந்து கொடுக்கப்பட்ட தண்டனை உத்தரவில், பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை, தலா 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்டதால், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை இழந்துள்ளார் பொன்முடி.
உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியை பொன்முடி இழந்ததால், அந்தத் துறை யாருக்கு கொடுக்கப்படும் என்ற கேள்விகள் இருந்தது. இந்நிலையில் உயர் கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கொடுக்கப்பட உள்ளது. பொன்முடியின் இலாகாவை ராஜகண்ணப்பனுக்கு வழங்குவது குறித்து தமிழக ஆளுநருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இதனால் பொன்முடி வகித்த உயர் கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறைகளை இனி ராஜகண்ணப்பன் கவனிப்பார் என கூறப்படுகிறது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ராஜகண்ணப்பனுக்கு போக்குவரத்துதுறை அமைச்சராக பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அத்துறையில் ராஜகண்ணப்பனுக்கு எதிராக சில விமர்சனங்கள் வந்த நிலையில், அவரிடம் இருந்த போக்குவரத்து துறை சிவசங்கரனுக்கு கொடுக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக ராஜ கண்ணப்பன் உள்ள நிலையில் தற்போது அவருக்கு கூடுதலாக உயர்கல்வித்துறையை கொடுத்துள்ளது தமிழக அரசு.
இதேபோல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி நிர்வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை தங்கம் தென்னரசுவிற்கும், முத்துசாமிக்கும் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.