சென்னை, அமைந்தகரையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க.வின் 15வது பொதுக்குழு கூட்டம் இன்று (09/10/2022) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. அதில், தி.மு.க.வின் தலைவராக இரண்டாவது முறையாகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதனை, உட்கட்சித் தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி பொதுக்குழுவில் அறிவித்தார். கனிமொழி துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, பொதுக்குழு மேடையில் வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கலைஞர், க.அன்பழகன் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.
விழா மேடையில் பேசிய திமுக எம்பி கனிமொழி, ''1947 ஆம் ஆண்டு ராபின்சன் பூங்காவிலே திராவிட முன்னேற்றக் கழகம் துவங்கப்பட்டபோது பெரியாருக்கும் நம்முடைய தலைவர்களுக்கும் இருந்த அந்த சிறிய இடைவெளி பேரறிஞர் அண்ணாவின் மனதை உறுத்திக் கொண்டிருந்தது. அந்த மேடையில் அவர் பேசும்பொழுது 'நாம் இயக்கத்தை நடத்தக்கூடிய விதம் என்பது தந்தை பெரியார் அவர்களை ஆறுதல்படுத்தக் கூடிய ஒன்றாக, அவர் போற்றக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும்' என்று சூளுரைத்தார். அதேபோல திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி 1967ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக் கொண்ட பொழுது சுயமரியாதை திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதில் தொடர்ந்து தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவது வரை தொடர்ந்து பெரியார் பாராட்டக்கூடிய, மெச்சக்கூடிய, போற்றக்கூடிய ஒரு ஆட்சியாக அதை உருவாக்கி காட்டினார்கள்.
அதே பேரறிஞர் அண்ணா 1967 ஆம் ஆண்டு நாம் ஆட்சி பொறுப்பிற்கு வரக்கூடிய நேரத்தில், தேர்தல் வெற்றி செய்திகள் வந்து கொண்டிருந்த பொழுது ஆட்சி வந்துவிட்டது கட்சி போச்சு என்று ஒரு பயத்தோடு சொன்னார்கள் என்று சொல்வார்கள். ஆனால் அந்த பயத்தை, அவருக்கு இருந்த அந்த சந்தேகத்தை கலைஞர் எப்பொழுதுமே விட்டுக் கொடுக்காமல் அது மாநில சுயாட்சியாக இருக்கட்டும், தன்னுடைய பதவியை விட்டு விலகினால் கூட கவலை இல்லை ஆனால் என்னுடைய கொள்கைகளை என்றும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று வாழ்நாள் முழுவதும் இருந்தார். இந்தி எதிர்ப்பாக இருக்கட்டும், மாநில சுயாட்சியாக இருக்கட்டும், மாநில உரிமைகளாக இருக்கட்டும், ஏன் சமூக நீதியாக இருக்கட்டும் தொடர்ந்து எந்த இடத்திலும் தன்னுடைய கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல், அதே நேரத்தில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த பொழுது தந்தை பெரியாரின் கனவுகளையும், அண்ணாவின் கனவுகளையும் இயக்கத்தின் லட்சியங்களையும் நிறைவேற்றிக் காட்டினார்.
அடித்தட்டில் யாருக்கெல்லாம் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறதோ அந்த இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் தான் உயர் கல்வி என்பது எல்லா மாநிலங்களை விட அதிகமாக இருக்கக்கூடிய இடம் என்பதை நிரூபித்துக் காட்டியவர் கலைஞர். அவருக்கு பிறகு பல பேர் சொன்னார்கள் திமுக இல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு வெற்றிடம் உருவாகிவிடும் என்று. பல பேர் ஆசைப்பட்டார்கள் வெற்றிடம் உருவாக வேண்டும் என்று. நம்முடைய பரம்பரை பகைவர்கள் கனவு கண்டார்கள். நமது கொள்கைகளுக்கு எதிராக ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி விடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் அந்த சாம்ராஜ்யங்களை எல்லாம் தகர்த்தெறியக்கூடிய வகையில் அந்த வெற்றிடத்தை காற்றாக இல்லை ஆழிப்பேரலையாக அவர்களை அழிக்கக்கூடிய ஒருவராக மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று காட்டினார். அவர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து இந்த இயக்கத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்'' என்றார்.