அரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
அடுத்து நான் தான் முதலமைச்சர். மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்றெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டியவர். ஆனால், இன்றைக்கு அவரின் நிலை என்ன? டயரை நக்கினவர்கள் என்று சொன்னது யார் நாங்களா? எடப்பாடியை ஓ.பி.எஸ்ஸைப் பார்த்து டயரை நக்கியவர்கள் என்று பட்டம் கொடுத்தது யார்? அன்புமணி. அந்த டயர் நக்கிகள் பக்கத்தில் நின்றுகொண்டு ஓட்டு கேட்டுக்கொண்டு வருகின்றீர்களே வெட்கமாக இல்லையா? இதுதான் நான் கேட்கின்ற கேள்வி.
ஏதோ ஒரு நிர்பந்தத்தில் நீங்கள் போட்டி போடுகிறீர்கள். நேற்றைய தினம் நம்முடைய, தருமபுரி நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார் அவர்கள் பாப்பிரெட்டிபட்டி பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசுகின்ற பொழுது சொன்னார். அன்புமணியிடத்தில் கம்பீரம் இல்லை முகத்தில் மலர்ச்சி இல்லை. அதனால் இப்பொழுது கூட ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் என்று ஒரு வேண்டுகோள் வைத்தார்.
போட்டி போடுவதற்கு விருப்பம் இல்லை கட்டாயப்படுத்தி அவரை நிற்க வைத்து இருக்கின்றார்கள். எனவே இப்பொழுதும் நாங்கள் சொல்கின்றோம், இன்னும் வேட்பு மனு வாபஸ் வாங்குவதற்கு நாட்கள் இருக்கின்றது. அந்த நாளுக்குள் நீங்கள் வாபஸ் வாங்கி விட்டுப் போனால் தான் உங்களுக்கு ஒரு மரியாதை கிடைக்கும். எனவே, அந்த நிலையில் தான் இன்றைக்கு அவர் தேர்தலில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
பத்து அம்சம் கோரிக்கை வைத்து இருக்கின்றோம் என்று பெரிய ஐயா சொல்லுகின்றார். நான் கேட்கின்றேன் அந்த 10 அம்ச கோரிக்கையில் சென்னையில் இருந்து சேலம் வரையில் போடக்கூடிய எட்டு வழிச் சாலை இருக்கிறதா? அதற்காக போராடினீர்களே. 8 வழிச் சாலை இருக்கக்கூடாது என்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி போராடவில்லையா? அன்புமணி ராமதாஸ் அவர்களே நேரடியாக வந்து அதை பார்க்கவில்லையா? அதற்காக அவர் கைது செய்யப்படவில்லையா? கைது செய்யப்பட்டது மட்டுமல்ல, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வழக்கு போட்டிருக்கிறார்கள். அந்த வழக்கும் நிலுவையில் இருக்கின்றது.
பத்து அம்ச கோரிக்கை வைத்தீர்களே கூட்டணி சேருகின்ற நேரத்தில் அந்தப் பத்து அம்ச கோரிக்கையில் அது இடம் பெற்றிருக்கின்றதா? எனவே, கூட்டணி என்கின்ற பெயரில் கொள்கையை அடகு வைத்து மக்களுக்கு துரோகம் செய்து இருக்கக்கூடிய கட்சி தான் பாட்டாளி மக்கள் கட்சி என்பதை நான் இங்கு அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுகின்றேன்.
அதுமட்டுமல்ல எடப்பாடி தன்னை கடவுளாக நினைக்கின்றார். தமிழ்நாட்டில், கடவுள் பக்தி கொண்ட முதலமைச்சர்கள் இருந்திருக்கின்றார்கள். கடவுள் மீது நம்பிக்கை இல்லாத முதலமைச்சர்களும் இருந்திருக்கின்றார்கள். ஆனால் நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு ஒரு முதலமைச்சர் இருக்கிறார் பாருங்கள், அவர் தான் இப்பொழுது இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி அவர்கள். அதைப்பற்றி பெரிய ஐயா டாக்டர் ராமதாஸ் அவர்கள், புத்தகத்தில் என்ன சொல்கின்றார் தன்னைக் கடவுள் என்று எப்படிச் சொல்லலாம் என்று கேள்வி கேட்டவர் அவர். ஆனால், இப்பொழுது எடப்பாடியை ஆதரிக்கின்றார். எனவே ஆதரிக்கின்ற காரணத்தினால் அவர் மணி அடிக்கிறார் என்று நேற்றைய தினம் நான் சேலத்தில் பேசியது உண்மைதான். உடனே கோபம் வந்து விட்டது யாருக்கு எடப்பாடிக்கு. ஸ்டாலினுக்கு என்ன திமிரு என்ற ஒரு கேள்வியை கேட்டு இருக்கின்றார். தன்னை ஒருவர் கடவுள் என்று சொல்வதுதான் திமிர், அதுதான் திமிரானது, ஆணவம் பிடித்த செயல்.
எனக்கு அறிவுரை சொல்லக் கூடிய எடப்பாடி அவர்களே! ஜெயலலிதா பற்றி பெரிய ஐயா எழுதியது என்ன? அதை அப்படியே நீங்கள் படிக்க வேண்டும், அவர் சொன்னார் எடப்பாடிக்கு கவுன்சிலராக கூட தகுதி இல்லை. இவரெல்லாம் முதலமைச்சர் என்று பேசியவர் அன்புமணி. இவ்வாறு பேசினார்.