
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் திறப்பு மற்றும் புதிய உபகரணங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் தொடக்க நிகழ்ச்சி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி. தயாநிதி மாறன், மேயர் ப்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் அது நிராகரிக்கப்பட்டதாக ஆளுநர் கூறியுள்ளாராம், ஆளுநரின் கருத்துகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவாக பதில் சொல்லிவிட்டார். இது கண்டனத்திற்கு உரியது. இதுமட்டுமின்றி ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தினால் கிட்டத்தட்ட 42க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
திமுகவாக இருக்கட்டும் எதிர்க்கட்சியான அதிமுகவாக இருக்கட்டும் சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளும் இணைந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைக்கிறோம். நாங்கள் மக்கள் பிரதிநிதிகள். இது மாநில சுயாட்சிக்கு இழைக்கப்பட்டுள்ள பெரிய இழுக்கு. இதில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முதலமைச்சர் விரைவில் எடுப்பார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் தூத்துக்குடியில் போய் இதை பேச முடியுமா? ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு இவ்வாறு பேசுகிறார். பொதுக்கூட்டத்திலோ, மாணவர்கள் மத்தியிலோ, தூத்துக்குடியிலோ இவ்வாறு பேச முடியுமா. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது” எனக் கூறினார்.