சென்னை அறிவாலயத்தில் கட்சி நிர்வாகியின் இல்லத்திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “சீர்திருத்த திருமணங்கள் 1967க்கு முன் நடைபெறும் என சொன்னால் அந்த திருமணம் சட்டப்படி அங்கீகாரம் பெற முடியாது எனும் நிலையில் நடைபெற்றுள்ளது. ஆனால் 67க்கு பின் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு அண்ணா தலைமையில் திமுக ஆட்சிப்பொறுப்பை ஏற்று, சட்டமன்றத்தில் சீர்திருத்த திருமணம் செல்லும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றித் தந்தார்.
கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் 3ல் துவங்குகிறது. அந்த விழாவை ஒட்டி கழகத்தில் உள்ள மாவட்டச் செயலாளர்களைக் கூட்டி சில விஷயங்களை விவாதித்து புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, நாடாளுமன்ற தேர்தலுக்காக ஆங்காங்கு பூத் கமிட்டிகளை அமைப்பது என்பன போன்ற இலக்குகளை நிர்ணயித்துள்ளோம். இலக்கை நாம் நிறைவேற்றினால் தான் நாட்டைக் காப்பாற்ற முடியும்.
மாநில வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களைத் தீட்டிக்கொண்டு இருந்தாலும் மாநில உரிமைகளை நாம் விட்டுக்கொடுக்கக் கூடாது. மாநில உரிமைக்கு போராட வேண்டிய நிலையில் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். 2024ல் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. அந்த தேர்தலிலும் நாம் முழுமையாக அகில இந்திய அளவில் பெற்றால் தான் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.