நடந்து முடிந்த நாடளுமன்ற தேர்தலுக்கு பிறகு தினகரன் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறி அதிமுக மற்றும் திமுக கட்சியில் இணைந்து வருகின்றனர். அமமுக கட்சியில் தினகரனின் நம்பிக்கையாக இருந்தவர் புகழேந்தி. இவரும் தினகரன் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இது தினகரன் தரப்பிற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதிமுகவில் புகழேந்தி இணைந்த பிறகு தினகரன் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறிவந்தார்.

இந்த நிலையில், திருச்செங்கோடு அருகே எலச்சிப்பாளையம் ஒன்றியத்தில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கர்நாடக மாநில முன்னாள் அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி பேசினார். அப்போது பேசிய புகழேந்தி , அம்மா ஜெயிலுக்கு போனதற்கு காரணமே தினகரன் தான் என்று பேசினார். அதோடு, தினகரன் குடும்பத்தினர் 20 ஆயிரம் கோடிக்கு சொத்து வைத்துள்ளனர். அதனால் விரைவில் தினகரன் சிறைக்கு போவது உறுதி என்றும் பேசினார். அதை தொடர்ந்து பேசிய அவர், அரசியல் பிழைப்பிற்காக ஸ்டாலின் இஸ்லாமியர்களை தூண்டி விடுகிறார் ” என்று கூறினார்.அமமுகவில் விலகி அதிமுகவில் சேர்ந்த புகழேந்தி தினகரனை கடுமையாக தொடர்ந்து விமர்சித்து வருவதால் தினகரன் தரப்பு அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.