திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் கலைஞர் 100 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 'உழைப்பு தந்த உயிர்ப்பு; ஒன்றியம் கண்ட வியப்பு' என்ற தலைப்பின் கீழ் பொதுக்கூட்டம், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வில்லிவாக்கம் கிழக்கு பகுதி அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் அருகில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எம்.பி, சி.பி.எம் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் கே. பாலபாரதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.
இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேசுகையில், "எந்த துறையாக இருந்தாலும் முதல் வரிசையில் கலைஞர் இருப்பார். அத்தகைய சிறப்பு வாய்ந்த மாமனிதருடைய நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட உள்ளோம். இந்திய அரசியல் சாசனத்தைப் படித்தவர்கள் இந்தியாவை இந்திய யூனியன் என்று சொன்னார்கள். மத்திய அரசுக்கு மாநில அரசு குறைந்த அரசு அல்ல. அதுமட்டுமின்றி சளைத்த அரசும் அல்ல.
குறிப்பாக பாஜக கட்சி ஆளாத மாநிலங்களோடு அவர்கள் மோதிக் கொண்டே இருந்தால் அந்த மாநிலத்தின் திட்டங்களை எப்படி செயல்படுத்த முடியும். மாநிலத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு கடந்த 9 ஆண்டுகளாக தென் மாநிலங்கள் அதிகமாக வஞ்சிக்கப்படுகின்றன. மாநிலங்களை மோடி மதிப்பது கிடையாது. மாநில உரிமைகளையும் மதிப்பது இல்லை. ஒரே நாடு ஒரே மொழி என பாஜகவினர் சொல்வது கடைசியில் ஒரே கட்சி ஒரே தலைவர் நரேந்திர மோடி என்பதில் போய் முடியும். இன்னும் 300 நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரும். அதற்குப் பிறகும் இந்த நிலைமை நீடிக்க வேண்டுமா இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்" எனப் பேசினார்.