
தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சென்னையில் கூட்டணி கட்சியான அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ''வரவிருக்கும் தமிழகத் தேர்தல்களில், மக்கள் தி.மு.க.வின் ஊழல், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், தலித்துகள் மற்றும் பெண்கள் மீதான அட்டூழியங்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு அதன் அடிப்படையாகக் கொண்டு வாக்களிப்பார்கள்.
தி.மு.க. அரசு ரூ. 39 ஆயிரம் கோடி மதுபான ஊழல், மணல் சுரங்க ஊழல், எரிசக்தி ஊழல், எல்காட் ஊழல், போக்குவரத்து ஊழல், பணமோசடி ஊழல் ஆகியவற்றைச் செய்துள்ளது. தமிழக மக்களுக்கு திமுக பதிலளிக்க வேண்டி உள்ளது. தி.மு.க. மீது இன்னும் பல மோசடிகள் உள்ளன. தமிழக மக்கள் இதற்கான பதில்களைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடமும், முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் தேடுகிறார்கள்” எனப் பேசியிருந்தார்.

இந்நிலையில் அதிமுக-பாஜக கூட்டணியை ஊழல் கூட்டணி என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தோல்வி கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. புலனாய்வு அமைப்புகளின் சோதனைகளில் இருந்து தப்பித்துக்கொள்ள பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி தோல்வி கூட்டணி; ஊழல் கூட்டணி. தொடர் தோல்வியை அதிமுக-பாஜக கூட்டணிக்கு கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள். அதிமுகவை அடமானம் வைத்தவர்கள் தமிழ்நாட்டை அடமானம் வைக்க துடிக்கிறார்கள்.
எந்த கொள்கையின் அடிப்படையில் அதிமுக-பாஜக கூட்டணி வைத்துள்ளார்கள்? ஜெயலலிதா கட்சியுடன் கூட்டணி வைக்கும் போது பேசத் தகுதியான வார்த்தையா ஊழல்? பதவி மோகத்தின் தமிழ்நாட்டின் சுயமரியாதை மற்றும் உரிமைகளை டெல்லியிடம் அடமானம் வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. இது மணிப்பூர் அல்ல, அமைதியான மாநிலத்துக்குள் வந்து அமைதியை குலைக்க பார்க்கிறார் அமித்ஷா.
தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் சிதைத்து சீரழிக்க நினைக்கிறது பாஜக. அதிமுகவின் தலைமையை மிரட்டிப் பணிய வைத்து தன்னுடைய சதித் திட்டங்களை பாஜக நிறைவேற்றப் பார்க்கிறது. பாஜக தனியாக வந்தாலும் எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். டெல்லிக்கு மண்டியிட்டு தமிழ்நாட்டை அடகு வைக்கும் துரோக கூட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க விடையளிப்பார்கள்' என கடுமையாக விமர்சித்துள்ளார்.