தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவித்ததும் கட்சிகள் தங்கள் கூட்டணிகள் மற்றும் இடப்பங்கீடு குறித்தான பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக ஈடுபட்டன. அப்போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜக இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணியில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், இடப்பங்கீட்டில் உடன்படிக்கை ஏற்படவில்லை. தங்கள் கட்சியினர் அதிக இடங்களில் நிற்க விருப்பப்படுகின்றனர். அதனால், அதிமுக கூட்டணியிலிருந்து தற்காலிகமாக வெளியேறுவதாக பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டு கட்சிகளும் தனித்தனியே வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பணிகளையும், பிரச்சாரங்களையும் மேற்கொண்டனர். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சிலர், பாஜக கூட்டணியில் இல்லாதது நல்லது என்று பேசி பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அதிமுகவின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், நாகையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “இந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவோடு பாஜக கூட்டணியில் இல்லாதது எங்களுக்கு பெருத்த நன்மை. பாஜக எங்களோடு கூட்டணியில் இல்லாததால் உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்” என்று பேசினார்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பாஜக வேட்பாளர்கள் இருவரை ஆதரித்து அதிமுக புதுக்கோட்டை மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் பிரச்சாரத்தில் ஈடுபட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும், பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டது தேர்தல் களத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சி 10 மற்றும் 11 வார்டுகளில் முறையே பாஜக சார்பில், சுமதி என்பவரும் ராஜாமணி என்பவரும் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையின் இறுதி நாளான நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்த வாகனத்தில் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே வாக்கு சேகரித்தார். அவர் வாக்குச் சேகரித்தபோது, அவர் அருகே பாஜக வேட்பாளர்கள் சுமதி மற்றும் ராஜாமணி ஆகியோர் நின்றிருந்தனர் என்பதும் கவனிக்கத்தக்கது. இதனை அறிந்த அதிமுக தலைமை அதிருப்தியில் இருப்பதாக அம்மாவட்ட அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.