
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான கிரண்குமார் காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
சமக்கிய ஆந்திரா கட்சியின் தலைவர் நல்லாரி கிரண்குமார். இவர் ஆந்திரா, தெலுங்கானா என இரு மாநிலங்களும் ஒன்றாக இருந்த ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் கடைசி முதல்வராக இருந்தவர். காங்கிரஸ் கட்சியில் இருந்த நல்லாரி கிரண்குமார் ஆந்திர மாநிலம் தனியாக பிரிக்கப்பட்ட போது சமக்கிய ஆந்திரா என்ற கட்சியை தொடங்கி பொதுத்தேர்தலில் ஆந்திரா முழுவதும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தொடர்ந்து தனது பழைய கட்சியான காங்கிரஸில் இணைந்தார்.
இந்நிலையில், கிரண்குமார் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் பங்கெடுக்காமலேயே இருந்தார். ராகுல் காந்தி இந்தியா முழுவதும் பாரத ஒற்றுமை பயணம் மேற்கொண்ட போது கூட கிரண் குமார், ஆந்திர மாநிலத்தில் நடந்த ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் கிரண்குமார் பாஜகவில் இணையப் போகிறார் என்ற தகவல் ஆந்திரா முழுவதும் தீயாய் பரவியது.
இந்நிலையில் கிரண்குமார் தற்போது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாகவும் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளும் படியும் தெரிவித்துள்ளார். முன்னதாக பாஜக தலைவர்கள் அவரை சந்தித்ததாகவும் அவரை பாஜகவில் சேர கோரிக்கை வைத்ததாகவும் தகவல் பரவியது. தற்போது காங்கிரஸில் இருந்து விலகிய கிரண்குமார், அமித்ஷாவின் ஹைதராபாத் வருகையின்போதோ அல்லது இந்த வாரத்தில் டெல்லி சென்று பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.