![Filing of Nomination Form in Chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/D7vqplcjOC4cn-2VB1Wr0tt2IBW-arYognSVzgpRFG0/1711428379/sites/default/files/2024-03/th_0.jpg)
![Filing of Nomination Form in Chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/C0pCku6oHPkohZGivrbB8M9AE2buo0cHZq0DHxXW3gU/1711428379/sites/default/files/2024-03/th-1_0.jpg)
![Filing of Nomination Form in Chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/Isl-4w5PeSl3JZZ8yk4Z6R8sRSJfvVMUlftS041eo4s/1711428379/sites/default/files/2024-03/th-3_0.jpg)
![Filing of Nomination Form in Chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/3yOkN7mzcI6i4boNMm4pb5-iO4f6q38jjqxH27lMcmc/1711428379/sites/default/files/2024-03/th-2_0.jpg)
![Filing of Nomination Form in Chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/UoO3gVbS4N1YIX9XePR-3wUMwAqrPYrcJMOW7YGTmMc/1711428379/sites/default/files/2024-03/th-4.jpg)
![Filing of Nomination Form in Chennai](http://image.nakkheeran.in/cdn/farfuture/8jF3tcwArncm3UrB1h_zCcB5chzuarsfpuGiEuxpvBM/1711454549/sites/default/files/2024-03/th-9.jpg)
நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் காரணமாக நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு தொகுதிகளிலும் முக்கிய கட்சி வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
தி.மு.க.வில் தற்போதைய தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை நேற்று அவர் தாக்கல் செய்தார்.
இந்தத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் தமிழிசை, கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க.வின் கனிமொழி எம்.பி.யை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கானா மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னையில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை நேற்று அவர் தாக்கல் செய்தார்.
அதிமுக சார்பில், தென்சென்னை தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இதே தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். இந்நிலையில், தற்போது மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை நேற்று அவர் தாக்கல் செய்தார்.
வடசென்னை தொகுதியில், தி.மு.க. சார்பில் தற்போதைய எம்.பி. கலாநிதி வீராசாமி போட்டியிடுகிறார். இவர் தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது கலாநிதி வீராசாமியுடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, எம்எல்ஏக்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி, கட்சியின் தலைமைசெயற்குழு உறுப்பினர் இளைய அருணா உடனிருந்தனர்.
அதேபோல அதிமுக சார்பில், ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். இவரும் தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். ராயபுரம் மனோ, வடசென்னை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்தவர். இவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு, அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், ராயபுரம் மனோவிற்கு வடசென்னை லோக்சபா தொகுதியின் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வடசென்னை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் பால் கனகராஜ் போட்டியிடுகிறார். இவரும் தனது வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். இந்த வேட்பு மனு தாக்கலின் போது, இவருடன் பாஜக மாநிலச் செயலாளர் சதீஷ்குமார், மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
மத்திய சென்னை மக்களவை தொகுதி வேட்புமனு தாக்கல் அண்ணா நகரில் உள்ள மாநகராட்சியின் மத்திய வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பாஜக சார்பில் அக்கட்சியின் இளைஞரணி மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் நேற்று, தேர்தல் நடத்தும் அலுவலர் கே.ஜே.பிரவீன் குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, பாஜக மாநிலச் செயலாளர் சுமதி வெங்கடேசன், மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.
தேமுதிக சார்பில் முன்னாள் எம்எல்ஏ ப.பார்த்தசாரதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் எம்.பி.பாலகங்கா உடனிருந்தனர்.