மதுரையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருச்சி மாநகரில் வரும் 24 ஆம் தேதி எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவும் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவும், அதிமுக துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்து 51 ஆம் ஆண்டு துவக்க விழாவும் முப்பெரும் விழாவாக வரும் 24 ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அதிமுக தொண்டர்கள் அங்கு லட்சக்கணக்கில் குழுமி அதிமுகவின் வலிமையை நிரூபிப்பார்கள்” எனக் கூறியிருந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், கே.சி.பழனிசாமி போன்ற கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கலந்து கொள்வார்களா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், “கட்சியில் தான் அவர்கள் இருக்கிறார்கள். மூத்த முன்னோடிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும். அவர்கள் கலந்து கொள்வார்கள்” எனக் கூறினார். சசிகலா கலந்து கொள்வாரா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “முறைப்படியான அறிவிப்பு ஒவ்வொன்றாக வரும். அனைவரும் கலந்து கொள்வார்கள்” எனக் கூறினார்.
ஏப்ரல் 16 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் அதிமுக மாநாட்டை நடத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20ல் மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநாடு நடைபெறும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “மதுரை மாநாடு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு நிச்சயம் திருப்பு முனையாக அமையும். அதிமுக மாநில மாநாடு 20/8/2023 அன்று மதுரையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து தலைவர்களும் மதுரையை திரும்பிப் பார்க்கும் படியாக அந்த மாநாடு அமையும். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும். புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்” எனக் கூறியிருந்தார்.
ஓபிஎஸ் தரப்பு, நாடாளுமன்றத் தேர்தலைக் கணக்கில் கொண்டு தனது தரப்பினை வலுப்படுத்தவும் தொண்டர்கள் மத்தியில் தனக்கு இருக்கும் பலத்தினை காட்டவும் இந்த முப்பெரும் விழா நடத்தப்படுகிறது எனச் சொல்லப்படுகிறது. அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் தென் தமிழ்நாட்டில் தனது செல்வாக்கை அதிகரிக்கவும் அங்கு அதிமுகவின் பலத்தைப் பெருக்கவும் மாநாட்டிற்காக மதுரையைத் தேர்வு செய்துள்ளார் என்றும் அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. எனவே ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரது அடுத்தடுத்த திட்டங்களும் நாடாளுமன்றத் தேர்தலைக் கணக்கில் கொண்டே இருக்கும் என்பதும் அவை எவ்வாறாக அமையும் என்பதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஏப்.20 ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏப்ரல் 20 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.