மதிமுக கட்சியின் 30 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கட்சியின் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்வில் அக்கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ, கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, “காலாவதியான மனிதர், போலீஸ் துறையில் ஓய்வு பெற்ற ஒருவர் இங்கே தமிழ்நாட்டில் வந்து குழப்பம் செய்துகொண்டிருக்கிறார். நடேசனார், தியாகராயர், நாயர் எனும் மூன்று பெருந்தலைவர்கள் பதித்த இந்த செடி இன்று வளர்ந்து மாமரமாக பெரிய விருட்சமாக வளர்ந்திருக்கிறது. எத்தனையோ சோதனைகளை கடந்து வளர்ந்து வந்திருக்கும் இதன் வரலாறு தெரியாமல், ஆளுநர் ஆர்.என்.ரவி உளறலுக்கு மேல் உளறலாக உளறிக் கொண்டிருக்கிறார்.
அவர் பி.ஜே.பி. கட்சிக்கு ஒரு ஏஜெண்டாகவோ இந்துத்துவா அமைப்புகளுக்கு ஒரு பிரதிநிதியாகவோ இருக்கலாமே தவிர ஆளுநர் பதவிக்கு பொருத்தமற்றவர். அவர் ஆளுநராக இருப்பதற்கோ ஆளுநர் மாளிகையில் இருப்பதற்கோ லாயக்கில்லாதவர். இதுவரை இந்தியாவில் எந்த ஆளுநரும் இப்படிப்பட்ட தவறுகளை செய்ததில்லை. காலாவதியான ஆர்.என்.ரவி காலாவதி பற்றி பேசுகிறார்” என்று தெரிவித்தார்.