ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா சமீபத்தில் காலமானார். இவர் மூத்த காங்கிரஸ் உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். திருமகன் மறைவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ஒரு சட்டமன்ற உறுப்பினர் இறந்துபோனால் அடுத்த ஆறுமாத காலத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வைக்க வேண்டும். அதன்படி தேர்தல் ஆணையம் வருகின்ற பிப்ரவரி 27 அன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவித்திருந்தது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்பதால் மீண்டும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் வர வேண்டும் என்று அக்கட்சியின் சார்பாக திமுக தலைமைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரியும் “ஈரோடு கிழக்கு எங்கள் தொகுதி. நாங்கள் நின்று வென்ற தொகுதி. எங்களது தோழமைக் கட்சிகளான திமுக, மதிமுக, விசிக ஆகியோர் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்க இருக்கிறோம். ஏறக்குறைய இன்று மாலை அவர்களைச் சந்தித்துப் பேச இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதனால் காங்கிரஸுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டால் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மருமகளும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகனின் இணையருமான பூர்ணிமா அவர்களை ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வைப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.