கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,761லிருந்து 7,447 ஆக உயர்ந்துள்ளது. இதில் 239 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நாடு முழுவதும் சுமார் 643 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,574, தமிழகத்தில் 911, டெல்லியில் 903, ராஜஸ்தானில் 553, தெலங்கானாவில் 473, கேரளாவில் 364, ஆந்திராவில் 363, கர்நாடகாவில் 207 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் பொதுத் தேர்வை ரத்து செய்வது பற்றி முதல்வர் எடப்பாடிதான் முடிவெடுக்க வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். இது பற்றி விசாரித்த போது, தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பற்றி, தன் துறை அதிகாரிகளிடம் ஆலோசித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அதே சூட்டோடு, முதல்வர் எடப்பாடியிடமும் இது பற்றி விவாதித்துள்ளார். எடப்பாடியோ, மேற்படிப்புக்கும் வேலை வாய்ப்புக்கும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அதனால் தேர்வையே நடத்தாமல் ஆல் பாஸ் என்கிற முடிவை நாம் எடுக்கமுடியாது. மேலும் கரோனாவின் தாக்கம் குறைந்ததும், ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே இரண்டாவது வாரத்திலோ தேர்வை நடத்தலாம் என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதுவும், தேர்வெழுதும் மாணவர்கள் அவரவர் பகுதியிலேயே தேர்வை எழுதுவதற்கான முயற்சியையும் நாம் எடுப்போம் என்று கூறியுள்ளார்.