Skip to main content

‘தமிழகத்திற்கான கோதுமை அளவை உயர்த்தி வழங்க வேண்டும்’ -  திமுக எம்.பி

Published on 26/03/2025 | Edited on 26/03/2025

 

DMK MP said  We should increase the quantity of wheat provided to TN

தமிழகத்திற்கு வழங்கப்படும்  கோதுமை அளவை மத்திய அரசு கடந்த பல மாதங்களாகவே குறைத்து விட்டது. இதனால், தமிழக ரேசன் கடைகளில் மக்களுக்குத் தேவையான போதிய அளவில் கோதுமை வழங்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கோதுமையின் அளவை  உயர்த்தி வழங்க வேண்டும் என்று திமுக எம்.பி. ராஜேஷ்குமார் மாநிலங்களவையில்  குரல் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய ராஜேஷ்குமார், “தமிழ்நாட்டில் கோதுமை பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டிய அவசரத் தேவையை கருத்தில் கொண்டு தங்களது கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஊட்டச்சத்து மற்றும் வருகையை மேம்படுத்தக் காலை சிற்றுண்டி உணவுத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்(NFSA) கீழ் தற்போது 8,576.02 மெட்ரிக் டன் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. அதே நேரத்தில் மாநிலத்தில் கோதுமை நுகர்வு மாதத்திற்கு 23,000 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலம் இல்லையென்பதால், அது இந்திய உணவுக் கழகத்தின் விநியோகத்தைச் சார்ந்துள்ளது.

கோதுமை ஒதுக்கீட்டை மாதத்திற்கு 23,000 மெட்ரிக் டன்னாக அதிகரிக்க ஏற்பாடு செய்யுமாறும், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்(NFSA) கீழ் இது சாத்தியமில்லை என்றால், திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் (OMSS) கீழ் 15,000 டன் கோதுமையை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறும் ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்  இந்த ஒதுக்கீடு அதிகரிப்பு தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோதுமை தேவையை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், மாநில மக்களுக்கு மலிவு விலையில் இந்த அத்தியாவசியப் பொருள் கிடைப்பதை உறுதி செய்யும். 

இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரை நான் கேட்டுக் கொள்கிறேன். இறுதியாக, தமிழ்நாட்டின் மீது இந்தியைத் திணித்து, மாநிலத்தின் நிதியை நிறுத்தி வைக்கும் ஒன்றிய அரசின் முடிவும், தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையும் தமிழ்நாட்டின் உரிமைகளையும் பிரதிநிதித்துவத்தையும் குறைக்கும் செயலாகும். ஒன்றிய அரசு ஒரு தாய்ப் பறவையாக இருக்க வேண்டும், ஒவ்வொரு மாநிலத்தையும் சமமாக மதிக்க வேண்டும் மற்றும் சமமான நிர்வாகத்தின் மூலம் அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

சார்ந்த செய்திகள்