அடுத்த ஆண்டு தேர்தல் நெருங்கி வருவதால் காவல்துறை பதவி நியமனங்களில் அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறது எடப்பாடி பழனிசாமி அரசு. அதாவது, தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதியாக இருந்தாலும் சரி, அ.தி.மு.க முன்னாள் தலைவர் ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி, ஆட்சியின் கடைசி வருடங்களில் காவல்துறையின் முக்கியப் பதவிகளில் தங்களுக்கு ஒத்துழைக்கும் அதிகாரிகளை உட்காரவைக்கவே நினைப்பார்கள். ஏனென்றால், தேர்தல் நேரத்தில் உளவுத்துறை உள்ளிட்ட காவல்துறையின் தயவு இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துகொள்ளவோ அல்லது பெரியளவில் டேமேஜ் ஏற்படாமலோ காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பது ஆட்சியாளர்களின் நம்பிக்கை.
அதேபோல் எடப்பாடி அரசும் காவல்துறையின் முக்கியப் பதவிகளில் தங்களுக்கு நம்பிக்கையான அதிகாரிகளே இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. மே கடைசியில் ஓய்வு பெறும் உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தியையே மீண்டும் பதவி நீட்டிப்பில் இருக்கும்படி எடப்பாடி கேட்டுக் கொண்டுள்ளார். சத்தியமூர்த்தி அதற்குச் சம்மதிக்கவில்லை என்று கூறுகின்றனர். அவருக்குப் பதில் உளவுத்துறை ஐ.ஜி.யாக யாரை நியமிக்கலாம், காலியாகவே இருக்கும் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. பதவியையும் சேர்த்து நிரப்பிடலாமா என்றெல்லாம் உள்துறைச் செயலாளர் பிரபாகரிடமும், டி.ஜி.பி. திரிபாதியிடமும் எடப்பாடி ஆலோசித்து இருக்கிறார். அதே சமயம் உளவுத்துறை ஐ.ஜி.பதவியைக் குறிவைத்து டேவிட்சன் தேவ ஆசிர்வாதம், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் காய்நகர்த்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.