“நாளையும் வாக்காளர்களை அடைத்து வைத்தால் அதிமுக போராட்டத்தில் குதிக்கும்” என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கடந்த வருடம், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து, ‘பொதுக்குழு செல்லாது’ என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. மேலும், ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக வேட்பாளரைத் தேர்வு செய்ய அறிவுறுத்தல் ஒன்றையும் கொடுத்திருந்தது. அதன்படி அதிமுக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்து தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பினை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, சஞ்சய் குமார் அமர்வு வாசித்தது. அதில், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “அவர்கள் துரோகிகள், எதிரிகள் என ஆகிவிட்டதன் பின், அவர்களது நிலையைப் பற்றிப் பேசி பயன் இல்லை. எம்.ஜி.ஆர். பல சோதனைகளை சந்தித்து தான் இந்த இயக்கத்தைத் தொடங்கினார். அதேபோல், ஜெயலலிதாவும் பல சோதனைகளைத் தாண்டி ஆட்சி அமைத்தார். அவரது மறைவுக்குப் பிறகும் பல சோதனைகளைச் சந்தித்து அதனை வென்றுள்ளோம்.
22 மாத திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்கவில்லை. ஈரோட்டிற்காக பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் மிக மோசமாக உள்ளன. இவை இரண்டும் இருக்கிறதா? இல்லையா? என தெரியவில்லை.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நடக்கும் விதிமுறை மீறல்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தோம்; மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் கொடுத்தோம்; இங்கிருக்கும் அதிகாரிகளிடமும் புகார் கொடுத்தோம்; யாரும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாளையும் இதுபோல் வாக்காளர்களை அழைத்து வந்தால் போராட்டத்தில் குதிப்போம்.
நான் எந்த முடிவையும் தன்னிச்சையாக எடுப்பதில்லை. இங்கிருக்கும் மூத்த நிர்வாகிகளைக் கலந்து பேசித்தான் எந்த முடிவுகளையும் எடுக்கிறேன். அது எங்களுடைய கொள்கை; என் எண்ணம். கூட்டணியும் தொடர்கிறது; அது அப்படியே தொடரும்” எனக் கூறினார்.