ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மூலம் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வுக்கான மறைமுக தேர்தல் 27 மாவட்டங்களில் இன்று காலை முதல் நடந்து வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் அதிமுகவுக்கு 14 இடங்கள் திமுகவுக்கு 5 இடங்களுமே இருந்ததால் மெஜாரிட்டியான அதிமுகவின் நவமணி என்பவர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக தேர்வு பெற்றார்.
ஈரோடு ஊராட்சி ஒன்றிய மறைமுக தேர்தலில் இங்கு மொத்தம் உள்ள 6 கவுன்சிலர்களில் திமுக மற்றும் அதிமுக தலா 3 என்ற சம அளவில் இருந்தது. இன்று மறைமுக தேர்தலுக்கு திமுகவின் மூன்று கவுன்சிலர்களும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் அதிமுகவின் மூன்று உறுப்பினர்களும் தேர்தல் நடக்கும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு காலை 11.30 வரை வரவில்லை.
அதற்கு காரணம் ஒரு மாவட்டத்தின் தலைநகரில் வெற்றிபெறுவது திமுகவா அதிமுகவா என்ற போட்டியில் இரு கட்சிகளும் சம அளவில் இருப்பதால் அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேரில் ஒருவர் திமுகவுக்கு ஆதரவு கொடுக்கும் மன நிலையில் இருந்ததை அறிந்து கொண்ட அதிமுக மாவட்ட நிர்வாகிகள், அந்த மூன்று பேரையும் எங்கோ கடத்திக்கொண்டு பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள். ஆகவேதான் அவர்கள் தேர்தல் நடக்கும் இடத்திற்கு வர முடியவில்லை என்று அதிமுகவினரே கூறுகிறார்கள். இதனால் தேர்தல் நடத்த மெஜாரிட்டி இல்லாததால் யூனியன் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரியே அறிவித்துவிட்டார்.