அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (21.11.2023) மாலை 4 மணிக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது, கூட்டணி குறித்து முடிவெடுத்தல், பூத் கமிட்டி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை அமைப்புகளின் களப்பணி குறித்தும், கட்சியை பலப்படுத்துவதற்கான பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் எனப் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். அதே சமயம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பி.வி. ரமணா, சி. விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான வழக்கில் குற்ற நடவடிக்கைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.