இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனால் ஆட்சி அமைக்கத் தனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.
இத்தகைய சூழலில் தான் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து பிரதமர் மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதத்துடன் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார். இதனையடுத்து ஆட்சியமைக்கப் பிரதமர் மோடிக்கு முறைப்படி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அழைப்பு விடுத்தார். முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சியின் தலைவராகப் பிரதமர் மோடி இன்று (07.06.2024) தேர்வு செய்யப்பட்டார். மேலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகப் பிரதமர் மோடியைத் தேர்வு செய்ததற்கான ஆதரவு கடிதத்தைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வழங்கி இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் அதாவது ஜூன் 9 ஆம் தேதி (09.06.2024) இரவு 07.15 மணிக்குப் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைப்பார் எனக் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் 3 ஆவது முறையாக மோடி பிரதமராகப் பதவியேற்க உள்ளது. பதவியேற்பு விழாவானது டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் 3ஆவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்க உள்ள மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு அதிமுக மற்றும் எனது சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.