கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலும், 18 தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது. இதில் வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது தேர்தல் ஆணையம். வருகின்ற மே 19ஆம் தேதி நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக அரசின் தலைமை கொறடா சபாநாயகரிடம் கொடுத்த மனுவைத் தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி ஆகிய மூவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த திடீர் நடவடிக்கைக்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது, தேர்தலுக்கு பின்பு அதிமுக தலைமைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனால் அதிமுக தலைமை கடும் அதிரிச்சியடைந்ததாக செய்திகள் வெளியானது பின்பு ஆட்சியை தக்க வைக்க இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தேர்தலில் அதிமுக பின்னடைவுக்கு ஒரு சில காரணங்களும் அரசியல் விமர்சகர்களால் சொல்லப்படுகின்றன. தேர்தல் பிரச்சாரத்தின் போது எடப்பாடி பழனிச்சாமிக்கு கொங்கு மண்டலத்தில் மட்டுமே அவரது பிரச்சாரம் ஈடுபட்டதாகவும், தென் தமிழகம், வட தமிழகம் பகுதிகளில் ஜாதி ரீதியான வாக்குகளை மட்டுமே நம்பி இருந்ததாகவும் மற்றும் கொங்கு மணடலத்தை தவிர மற்ற பகுதிகளில் எடப்பாடியின் பிரச்சார யுக்தி மக்களை சென்றடையவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் புதிய வாக்காளர்கள் கமலுக்கும் சீமானுக்கும் அதிகளவில் வாக்களித்ததாகவும் கூறப்படுகிறது.
அதோடு அதிமுகவின் தென்தமிழக வாக்குகளை தினகரனின் அமமுக கட்சி பிரித்தது அதிமுகவுக்கும், எடப்பாடிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினருக்குள் நடக்கும் உட்கட்சி பூசலும் அதிமுகவின் பின்னடைவுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. இது பற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது மே 23க்கு பிறகு தமிழக அரசியலில் பெரிய மாற்றங்கள் கட்சிகள் மற்றும் அரசியல் ரீதியாகவும் வரும் என்கின்றனர்.