![Edapadi dose for Administrators! Posters](http://image.nakkheeran.in/cdn/farfuture/0kNpvKvC9oIOYBLqvNNtZiG3X_00DefA6J7Q3sx4Q24/1615107655/sites/default/files/inline-images/%3Dtryutreyt.jpg)
அதிமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை ஓரிரு நாளில் வெளியிட எடப்பாடியும் பன்னீரும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அதிமுக மா.செ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இரண்டு நாட்களாக ஆலோசனை நடந்தது,ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று பேர் கொண்ட பட்டியலை மா.செ.க்கள் தந்துள்ளனர்.அவர்களிடம் விசாரணை நடத்திய இபிஎஸ்சும், ஓபிஎஸ்சும், பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களை பற்றி பாசிட்டிவ்-நெகட்டிவ்வுகளை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளனர். இதில் கள்ளக்குறிச்சி மா.செ.வும் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ.வுமான குமருகுரு உள்பட பல மா.செ.க்களுக்கு டோஸ் விழுந்துள்ளது.
இதனையறிந்து, அதிமுக மா.செ.க்கள் தரப்பில் நாம் விசாரித்தபோது, "இந்தமுறை குமரகுருவுக்கு எதிரான புகார்கள் தலைமைக்கு நிறைய போயிருக்கிறது. இந்த சூழலில், தனது தொகுதியான உளுந்தூர்பேட்டை உள்பட கள்ளக்குறிச்சி மாவட்டதிலுள்ள தொகுதிகளுக்கான பட்டியலில் வெற்றிபெறக் கூடிய வேட்பாளர்களை அடையாளம் காட்டாமல் டம்மியான ஆட்களையே சிபாரிசு செய்திருக்கிறார். அதைக் கண்டுதான் டென்சனாகி குமரகுருவை கடிந்து கொண்டார் எடப்பாடி" என விவரிக்கிறார்கள். இதற்கிடையே, அதிமுக தலைமையகம் அமைந்துள்ள ராயப்பேட்டையில் உளுந்தூர்ப்பேட்டை தொகுதி குறித்து வன்னியர் கல்வி இயக்கம் சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அதிமுக தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில், '35 ஆண்டுகளாக தனித்தொகுதியாக இருந்த உளுந்தூர்பேட்டை தொகுதி பொது தொகுதியாக மாறி 10 ஆண்டுகளாக ஆகியும் அதிமுகவில் வன்னியர் வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. வன்னியர் வேட்பாளருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்' என அச்சிட்டுள்ளது வன்னியர் கல்வி இயக்கம். இந்த போஸ்டர் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்த, அதுகுறித்து விசாரித்த உளவுத்துறை, போஸ்டரில் குறிப்பிட்டுள்ள வாசகம் உண்மைதான் என முதல்வர் எடப்பாடிக்கு ரிப்போர்ட் தந்துள்ளது.