தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30 என 2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று வாக்குகளை எண்ணும் பணி துவங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை மாவட்டம் வாரியாக தெரிவித்து வருகின்றனர்.
![pmk](http://image.nakkheeran.in/cdn/farfuture/MMlElwKcirpiqMH5BRRZeCwvRai4oeomAU-5QiB50bY/1578054218/sites/default/files/inline-images/71_11.jpg)
இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட இடங்களில் அதிமுக கட்சியினர் சரியாக களப்பணியில் ஈடுபடவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் அதிமுகவில் சொந்த கட்சியினர் செல்வாக்கு இருக்கும் இடத்தில் கூட்டணி கட்சிக்கு அந்த இடங்களை ஒதுக்கியதால் யாரும் வேலை பார்க்கவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக கூட்டணி படு தோல்வி அடைந்துள்ளதால் கூட்டணி கட்சிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவாக அதிமுக வாக்கு அளித்ததால் தோல்வி ஏற்பட்டுள்ளது. மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிறுபான்மையின மக்கள் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை மக்கள் புறக்கணித்துள்ளனர் என்றும் கூறி வருகின்றனர். இதனால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை மக்கள் புறக்கணித்து விட்டனர் என்று கூட்டணி கட்சிக்குள்ளேயே அதிருப்தி நிலவி வருவதாக கூறுகின்றனர்.
குறிப்பாக ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பாக பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த 31-ம் தேதி திண்டிவனம் அருகே ஓமந்தூரில் நடைப்பெற்றது. அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ் அதிமுக கூட்டணியில் உள்ளாட்சித் தேர்தலில் பாமகவுக்கு போதிய ஒதுக்கீடு தராதது வருத்தமளிக்கிறது. எதிர்வரும் தேர்தலில் உரிய பிரதிநிதித்துவம் தரவேண்டும்' என்றும் கூறினார். அப்போது தொடர்ந்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், வரும் சட்ட மன்ற தேர்தலுக்குள் பாமகவில் 80 இலட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று பேசியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே பாமகவினர் அதிமுகவுக்கு எதிராக பேசி வருவது கூட்டணிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும்கட்சியான அதிமுக தோல்வியை சந்தித்துள்ளதால் கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.