கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியிலிருக்கும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளதால் அங்குத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
கர்நாடகா மாநிலம் மாண்டியா டவுனில் உள்ள அரசு பி.யூ. கல்லூரி மைதானத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு தங்கள் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தார்.
பின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பேசிய பிரியங்கா காந்தி, “கடந்த மூன்றரை வருடமாக கர்நாடகா மாநிலத்தில் ஆட்சி செய்த பாஜக மக்களை ஏமாற்றி மோசடி செய்துவிட்டது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் பாஜக கர்நாடகாவில் ரூ. 1.5 லட்சம் கோடியை சுருட்டியுள்ளது. மாநிலத்தில் மக்களுக்காக பணியாற்றும் அரசு ஆட்சியில் இருக்க வேண்டும். மேசைக்கு கீழ் லஞ்சம் வாங்கு பாஜக ஆட்சி உங்களுக்கு தேவையா?
கூட்டணி ஆட்சியில் இருந்து எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சி அமைத்து மக்களிடம் இருந்து பணம் வசூலித்ததுதான் பாஜக அரசின் சாதனை. இந்த பாஜக அரசு 40% கமிஷன் அரசு என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். விவசாயிகளின் அனைத்து விளை பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான அரசு துறைகளில் நடந்த பணி நியமனங்களிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. ஊழல் வழக்கில் சிக்கிய பாஜக எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பா குறித்து பிரதமர் மோடி பேச மறுக்கிறார்.
பாகிஸ்தான், இந்துத்துவா போன்றவற்றை பயன்படுத்தி தேர்தலை சந்திக்கும் பாஜக அதனை விட்டுவிட்டு மக்களுக்காக செய்த திட்டங்களையும் வளர்ச்சிப் பணிகளையும் மக்களிடம் கூறி தேர்தலில் போட்டியிட வேண்டும்” என்று பேசினார்.