தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க ஸ்டாலினும், தி.மு.க.வினரும் பெரும் முயற்சி எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது, சட்டமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே, கரோனாவின் கொடிய காலடித் தடம், சட்டமன்றத்திலும் பதிந்து விடக்கூடாது என்கிற கவனத்தோட, கூட்டத் தொடரை ஒத்திவைக்கும்படி தி.மு.க. கோரிக்கை வைத்தபடியே இருந்தனர். ஆனால் எடப்பாடி அரசோ அதைக் கண்டுக்காமல் விடாப்பிடியாக நடத்திக் கொண்டே இருந்ததுள்ளது என்கின்றனர். தி.மு.க.வின் கடும் எதிர்ப்பால் ஏப்ரல் 9-ந் தேதிவரை நடக்க இருந்த கூட்டத்தைக் காலையிலும் மாலையிலுமாக 31-ந்தேதி வரை நடத்தி முடிக்கலாம் என்று எடப்பாடி திட்டமிட்டார்.
இந்த நிலையில் டெல்லியில் நாடாளுமன்றக் கூட்டத்தையும் கரோனா காரணமாக ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தின. இதற்கு மோடி அரசும் எந்த பதிலும் கொடுக்காததால், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டத் தொடரைப் புறக்கணிப்பதாக அறிவித்தன. இதே பாணியில் தி.மு.க.வும் சட்டமன்றக் கூட்டத் தொடரைப் புறக்கணிப்பதாக 23 ந் தேதி அறிவித்தது. இது தொடர்பான கடிதத்தை மு.க.ஸ்டாலின் சபாநாயகர் தனபாலுக்கு அனுப்பி வைத்தார். இதேபோல் தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளான காங்கிரஸும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்று அறிவித்தது. 100க்கும் அதிகமான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரும் வராமல் இருந்தால், ஆளில்லாக் கடையில் டீ ஆத்துற மாதிரி ஆயிடுமேன்னு நினைத்த எடப்பாடி, சட்டசபைக் கூட்டத் தொடரை 24-ந் தேதியோடு முடிவுக்கு கொண்டு வருவதாக சபாநாயகர் மூலம் அறிவித்தார்.