தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு காரணமாகக் கோவில்கள் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மூடப்பட்டிருக்கும் நிலையில், பள்ளிகள், திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்படுவதைப் போல் கோவில்களுக்கும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட வேண்டுமென பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதன்படி இன்று மாநிலம் தழுவிய போராட்டத்தை அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி பாஜகவினர் தமிழகத்தின் 12 முக்கிய கோவில்கள் முன்பாக இந்த போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ''போராடுவதற்கான வலுவான காரணங்கள் எதுவும் இல்லாததால் இப்படிப்பட்ட போராட்டத்தை நடத்தி அவர்களாகவே அவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரை ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி தான் நோய்த்தொற்று தளர்வுகளை நாம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மூடப்பட்டிருந்தாலும் அனைத்து வகையான பூஜைகளும் எப்போதும் போல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. நோய்த் தொற்று அபாயம் நம்மைவிட்டு நீங்கியவுடன் நிச்சயமாக முதலமைச்சர் கோவில்களை திறப்பதை தான் முதல் பணியாக மேற்கொள்வார் என்ற உறுதியை அளிக்கின்றோம்'' என்றார்.