நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப். 13ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (மார்ச் 13ம் தேதி) தொடங்கியது. இந்த இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தின் இரண்டாம் அமர்வு இன்று தொடங்கியதும், மறைந்த தலைவர்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பிறகு கூட்டத்தொடர் தொடங்கியது.
ஆளுங்கட்சி எம்.பி.க்கள், ராகுல் காந்தி வெளிநாட்டிற்குச் சென்று நாடாளுமன்றப் பிரச்சனைகள் குறித்து விவாதித்தது தவறு என்றனர். அதேபோல், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதானி உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்தனர். இதனால், நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். அதன் பிறகு பிற்பகல் 2 மணிக்கு மக்களவை கூடியது. அப்போது மீண்டும் பாஜகவினர், இந்திய ஜனநாயகத்தை இழிவு செய்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். அதேபோல், எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பின. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் நாளை வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆன்லைன் சூதாட்டம் குறித்து தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டு ஒப்புதல் அளித்து சட்டப்பேரவைக்கு அனுப்பினார். தொடர்ந்து அவசர சட்டத்தை சட்டமாக ஆக்க தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் கூடி மசோதா கொண்டு வந்து ஏகமனதாக ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை நிறைவேற்றியது. நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநருக்கு அனுப்பட்டது. ஆளுநர் நெடுநாட்கள் கழித்து அதை திருப்பி அனுப்புகிறார். சட்டம் இயற்ற உரிமை இல்லை எனக் கூறி ஆளுநர் திருப்பி அனுப்புகிறார். ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியல்ல, இதை மத்திய அரசு கண்டும் காணாதது போல் இருப்பது தவறு என சுட்டிக் காட்டவும் உரிய தீர்வு காண வேண்டும் என்பதற்காகவும் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொடுத்து இருந்தோம். அதற்காக கொடுக்கப்பட்ட நோட்டீஸ் பேசப்பட வேண்டும் என நேற்றே சொன்னோம். இன்று காலையும் அதை வற்புறுத்தி பேசினோம். ஆனால், பேரவைத் தலைவர் அதை அனுமதிக்கவில்லை.
பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்தில் துணைத்தலைவராக இருப்பதால் கேள்வி நேரத்தில் அவரை பேச அனுமதித்தனர். அதுகூட தவறில்லை. ஆனால் பிரகலாத ஜோஷியை பேச சபாநாயகர் அனுமதித்தார். நாங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து எங்களை பேச விடுங்கள் எனக் கூறினோம். எங்களை சபாநாயகர் பேச அனுமதிக்கவில்லை. அவர் செய்தது தவறு என சுட்டிக் காட்டுவதற்காக அலுவல் ஆய்வுக்குழு நடந்தது. அலுவல் ஆய்வுக் குழுவில் இதுகுறித்து பேசினோம். சபாநாயகர் எங்களை பேசவிடாதது வருத்தம் தருகிறது. இந்த அலுவல் ஆய்வுக் குழுவில் நாங்கள் இருக்க விரும்பவில்லை எனக் கூறி பாராளுமன்றத்தின் காங்கிரஸ் குழு தலைவரும் நானும் வெளிநடப்பு செய்துள்ளோம்.” எனக் கூறினார்.