
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க.வின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் காங்கிரஸ் கட்சியின் கே.எஸ்.அழகிரி. திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு ஆகியோர் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், காங்கிரஸ் போட்டியிடும் 25 சட்டமன்றத் தொகுதிகள் இறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கையெழுத்திட்டனர். அதன் தொடர்ச்சியாக, காங்கிரஸ் போட்டியிடும் 25 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பட்டியல் வெளியானது.
அதன்படி, பொன்னேரி (தனி), வேளச்சேரி, தென்காசி, ஸ்ரீவில்லிப்புத்தூர் (தனி), ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீபெரும்புதூர் (தனி), சோளிங்கர், குளச்சல், விளவங்கோடு, மேலூர், சிவகாசி, ஓமலூர், உதகை, காரைக்குடி, ஊத்தங்கரை (தனி), அறந்தாங்கி, விருத்தாச்சலம், உடுமலைப்பேட்டை, கள்ளக்குறிச்சி (தனி), ஈரோடு (கிழக்கு), திருவாடானை, கோவை (தெற்கு), கிள்ளியூர், நாங்குநேரி, மயிலாடுதுறை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சட்டமன்றத் தொகுதிகளும், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.