தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. மற்ற கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. தலைமை தொடர்ந்து வருகிறது. இதில் தே.மு.தி.க. கட்சியுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இழுபறி நீடிக்கிறது.
இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமியை தே.மு.தி.க.வின் எல்.கே.சுதீஷ், அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பின்போது தே.மு.தி.க. நிர்வாகிகள், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதில் தொகுதிப் பங்கீடு இறுதியானதாகவும் தகவல்கள் கூறுகின்றன.