Skip to main content

வேட்புமனு தாக்கல் செய்த அமைச்சர் சீனிவாசனின் பகீர் பேச்சு..!

Published on 13/03/2021 | Edited on 13/03/2021

 

dindugul sreenivasan filed nomination for election and met press

 

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேட்பு மனு தாக்கல் செய்தார். திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார். இதன் மூலம் திண்டுக்கல் தொகுதியில் இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. அதன்படி திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுவதற்கு நேற்று (12.03.2021) வேட்புமனு தாக்கல் செய்வதற்காக மதியம் திண்டுக்கல் ஆர்.டி.ஒ அலுவலகத்திற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது ஆதரவாளர் உடன் வந்தார். நுழைவு வாயிலில் அவருடைய ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

 

அதை அடுத்து அவர் திண்டுக்கல் தேர்தல் நடத்தும் அலுவலர் காசி செல்வியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அத்தோடு அவர் சொத்து விவரத்தை சமர்ப்பிக்கவில்லை. வருகிற 15ஆம் தேதி சொத்து விவரத்தை சமர்பிப்பதாக தெரிவித்தார். அப்போது முன்னாள் மேயர் மருதராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதைதொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “தமிழகத்தில் அதிமுக சிறப்பான ஆட்சியை வழங்கியது. கரோனா நிவாரணம், பொங்கல் பரிசு, விவசாயக் கடன், சுய உதவிக் குழுக் கடன் மற்றும் நகை கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்தது. 

 

அதோடு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம், குடும்பத் தலைவிக்கு தலா 1500 ரூபாய் ஆகியவற்றுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இலவச திட்டங்களை அறிவிப்பதில் திமுக போன்று அதிமுக ஏமாற்றாது என்பது மக்களுக்குத் தெரியும். எனவே மக்களின் ஆதரவுடன் 234 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்று, தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால், அதிமுக சிறுபான்மையினருக்கு எதிரானது என்று தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. அதிமுக ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது. சிறுபான்மைக்கு எதிராக ஒருபோதும் அதிமுக செயல்பட்டதில்லை. சிறுபான்மையினரின் காவலராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். 

 

திண்டுக்கல்லில் திப்பு சுல்தான் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. கரோனா காலத்தில், எனது சொந்த செலவில் சிறுபான்மையினருக்குப் பல்வேறு உதவிகளை செய்தேன். மேலும் ஒன்றிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ இருந்தபோது நிலவிய கடும் குடிநீர் தட்டுப்பாடு தற்போது நீக்கப்பட்டு, தினமும் குடிநீர் வழங்கப்படுகிறது. எனவே திண்டுக்கல் தொகுதியில் கடந்த தேர்தலில் வெற்றிபெற்றதை விட மூன்று மடங்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்” என்று கூறினார். இந்தப் பேட்டியின்போது மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர், கூட்டுறவு தலைவர் அபிராமி, பாரதி முருகன் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்