அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி, பின்னர் தான் அப்படி பேசவில்லை என்று பல்டி அடிப்பது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் வழக்கம். ஆனால், தற்போது ஜெயலலிதாவே கொள்ளையடித்தார் என்று பேசியது முந்தைய பேச்சுக்களுக்கெல்லாம் உச்சமாக அமைத்திருக்கிறது.
திண்டுக்கல் சீனிவாசனின் தற்போதைய சர்ச்சையும் பல்டியும்: ’’ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை, தினகரன் மூலம் பெற்றுக் கொண்டு, வெற்றி பெற்ற 18 எம்எல்ஏக்களும் இப்போது அதிமுகவிற்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள், மைசூர், அமெரிக்கா என ஜாலியாக சுற்றுப்பயணம் செய்தார்கள். இதைப் பார்த்துக் கொண்டு சும்மாவா இருக்க முடியும்’’என்று பேசிவிட்டு, ’’ஜெயலலிதா பற்றி எந்த தவறான கருத்தையும் நான் பேசவில்லை. ஜெயலலிதாவுக்கு தெரியாமல் கொள்ளையடித்த பணத்தில் தினகரன் அரசியல் நடத்துகிறார். ஜெயலலிதாவை பயன்படுத்தி சசிகலா குடும்பத்தினர் கொள்ளை அடித்த பணத்தில் தினகரன் அரசியல் நடத்துகிறார். ’’ என்றுதான் பேசினேன் என பல்டி அடித்துள்ளார்.
சீனிவாசன் சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், ‘‘அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா இட்லி, சட்னி சாப்பிட்டதாக நாங்கள் சொன்னதெல்லாம் பொய்தான். எங்களை மன்னித்து விடுங்கள்’’ என்று பேசி அதிர்ச்சியை கிளப்பினார். அமைச்சரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்து, பணம் இல்லாமல் தேர்தலில் ஒன்றும் செய்ய முடியாது என்று ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அடுத்ததாக, திண்டுக்கல்லில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில், ‘துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து பேசினார்’ என்று தெரிவித்தார். இதையடுத்து, ‘பாரதப் பிரதமர் யார் என்பதே அமைச்சருக்கு தெரியவில்லை’ என்று சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் பறந்தன.
இப்படி தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்ததால், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது, கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து கடந்த சில மாதங்களாக பொதுமேடைகளில் பேசுவதை அவர் தவிர்த்து வந்தார். இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் நேற்று நடந்த கூட்டத்தில், ஆட்சியின் போது ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை, டிடிவி தினகரன் திருடிக் கொண்டார் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்தி, தான் அப்படி பேசவில்லை என்று பல்டி அடித்துள்ளார்.