அ.தி.மு.க கட்சியின் 52 ஆம் ஆண்டு துவக்க விழா தமிழகம் முழுவதும் அக்கட்சியினரால் நேற்று (17-10-23) கொண்டாடப்பட்டது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரில் அ.தி.மு.க சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “சைத்தான் என்று சொல்லக்கூடிய பா.ஜ.க கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியே வந்து உங்களை பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் 100 மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றால், கூட்டணியில் இருந்து விலகியதற்கு எடப்பாடி பழனிசாமி ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறார். இஸ்லாமியர்களை வெறுக்கின்ற பா.ஜ.க.வுடன் நீங்கள் கூட்டணி வைப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை என்று இஸ்லாமிய சகோதரர்கள் அடிக்கடி சொல்வார்கள். அதற்கு சில, சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த கூட்டணியில் இருந்து விலகாமல் இருந்து வந்தோம்.
வாஜ்பாய் அமைச்சரைவில் தி.மு.க. கூட்டணி வைத்து அதன் பின்பு சோனியா காந்தி அமைச்சரவையில் காங்கிரஸில் இணைந்தார்கள். தி.மு.க.வை இஸ்லாமியர்கள் ஏற்றுவிட்டார்கள். ஆனால், எங்களை வெறுத்து விட்டீர்கள். அதற்கு காலம் பதில் சொல்லும் என்பதற்கிணங்க பா.ஜ.க.வில் இருந்து விலகி, இனிமேல் அதில் இணைய மாட்டோம் என்று நாங்கள் சொல்லிவிட்டோம். ஆனால், தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இணைந்து விடுவார்கள் என்று பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள்.
தமிழகத்தில் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று நாங்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். அதே போல், அடுத்த பிரதமர் மோடி தான் என்று இங்கு இருக்கக்கூடிய பா.ஜ.க தலைவர்கள் கூறியிருந்தார்கள். அதன்படி தான் நாங்கள் அவர்களோடு இருந்தோம். மேலும், அண்ணாமலை தான் அடுத்த முதல்வர் என்று செல்கிற இடமெல்லாம் அவர்கள் சொல்லி கொண்டு இருந்தார்கள். அதில் தவறும் ஒன்றும் இல்லை. ஏனென்றால், பத்து பேர் இருக்கக்கூடிய கட்சியில் கூட அடுத்த முதல்வர் நான் தான் என்று சொல்வார்கள். அது போல், தான் மக்கள் ஓட்டு போட்டால் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால், மோடி மீண்டும் பிரதமர் ஆகிவிட்டால், நாங்கள் முதல்வர் ஆவதற்கு அவர்களை எதிர்பார்க்கக் கூடாது என்பதற்காக தான் ஆண்மையோடு நாங்கள் வெளியே வந்தோம்.
சில வாரங்களுக்கு எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அரசியல் சார்ந்து பல்வேறு விஷயங்களை பற்றி பேசி வந்தார். அதன் பிறகு அடுத்த 15 நாட்களில் சில சூழ்நிலைகள் மாறுகிறது. அ.திமு.க முக்கிய தலைவர்கள் சிலர் சேர்ந்து பா.ஜ.கவை சேர்ந்த நட்டாவை சந்தித்து இனிமேல் உங்களுடன் கூட்டணி வைப்பது இல்லை என்று சொல்லி வந்தார்கள். மேலும், அதில் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் தான் ஆட்சிக்கு வரமுடியும். அதனால், அந்த தேர்தல் எங்களுக்கு முக்கியமான தேர்தல் என்று கூறிவிட்டு வந்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவிருக்கும் அ.தி.மு.க.வுக்கு இரட்டை வேடம் போட வேண்டிய அவசியம் என்ன? பா.ஜ.க.வால் அதிமுக கட்சி வளரவில்லை. நம்மால் தான் பா.ஜ.க வளர்ந்திருக்கிறது. அதனால் தானே கூட்டணி வைத்தார்கள். அதனால், எங்களை முழுமையாக நீங்கள் நம்ப வேண்டும். இனிமேல், நாங்கள் செத்தாலும், பா.ஜ.க பக்கமோ அல்லது சிறுபான்மை மக்களுக்கு எதிராக இருக்கின்ற யார் பக்கமும் சேர மாட்டோம் என்பதை கூறிக் கொள்கிறேன்” என்று கூறினார்.