ஒன்றிய அரசின் எந்தப் பதவிக்கும் வட“இந்தி”யர் பார்த்து தேர்வு செய்வதே எழுதாத சட்டமாகியிருக்கிறது! திருச்சி ரயில்வே தொழில்நுட்பப் பணிக்கே 540 பேரில் 15 பேர்தான் தமிழர்; மீதி 525 பேரும் வட“இந்தி”யர் மற்றும் பிற மாநிலத்தவர்! இந்தப் பணி ஆணைகளை முற்றிலும் ரத்து செய்வதுடன், மோடி ஆட்சியின் பணித் தேர்வு மோசடிக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க தமிழக முதல்வர் தலையிட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயிவேத்துறை, வங்கிகள், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, உளவுத்துறை, புலனாய்வுத்துறை, தேர்தல் ஆணையம் எனத் தமிழ்நாட்டில் இயங்கும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் அனைத்துமே வட“இந்தி”யர் மயமே! இதற்குக் காரணம் இவற்றிற்கான தேர்வுகள் அனைத்திலும் மோசடி நடப்பதே! வட“இந்தி”யர் பார்த்து பணியில் அமர்த்துவதே!
இதில் கடைகோடி வேலைகளையும் விடுவதில்லை. திருச்சி பொன்மலை ரயில்வேத் தொழிற்சாலையில், ரயில்வே பணியமர்த்து வாரியம் (ஆர்ஆர்பி) மூலம் கிரேடு–3 தொழில்நுட்பப் பணியாளர்கள் 540 பேருக்கு வேலை வழங்கிட சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடந்தது. இதில் மொத்தம் 540 பேரில் 15 பேர் மட்டும்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். எஞ்சியவர்கள் வட “இந்தி”யர்கள் மற்றும் ஆந்திர, கேரள மாநிலத்தவர்கள் என்று தெரியவருகிறது. இது நேர்மையான முறையிலான பணித்தேர்வாகத் தெரிவில்லை.
எனவே இந்த 540 பேருக்கும் வழங்கப்பட்ட பணியமர்த்த ஆணைகளை முற்றிலுமாக தென்னக ரயில்வே ரத்து செய்ய வேண்டும்; தமிழக முதலமைச்சர் அவர்கள், இதில் தலையிட்டு, ஒன்றிய அரசைத் தொடர்பு கொண்டு, மேற்படி பொன்மலை தொழிற்சாலைக்கான பணித்தேர்வு ஆணையை முழுமையாக ரத்து செய்யவைத்து, தகுதியுள்ள தமிழ்நாட்டுப் பணியாளர்களுக்கே வேலை கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு கூறியுள்ளார்.