தமிழகத்தில் வருகிற 2021ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி அரசியல் களம் சூடுபிடித்துவருவதால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய ஆளும் கட்சியினரும் எதிர்க் கட்சியினரும் இப்போதே தொகுதிகளை தக்கவைத்துக் கொள்வதற்காக வளம்வந்து கொண்டிருக்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிதான் சின்ன தொகுதியாக உள்ளது. அதாவது 48 வார்டுகளைக் கொண்ட மாநகராட்சியாகவும் 9 ஊராட்சிகளைக் கொண்ட ஒன்றியமாகவும் திண்டுக்கல் செயல்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில்தான் கடந்த தேர்தலில் சீனிவாசன் முதன்முதலில் போட்டியிட்டு 22 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதன்மூலம், சீனிவாசனுக்கு வனத்துறை அமைச்சர் பதவியை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.க்கு விசுவாசமாக இருந்துவரும் சீனிவாசன், வாக்களித்த மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில், நகரம் முதல் பட்டித் தொட்டிகள் வரை, தார் ரோடு, சிமெண்ட் ரோடு, சாக்கடை, நாடகமேடை, பயணிகள் நிழற்குடை, குடிநீர், மின்சாரம் மற்றும் இலவச வீட்டுமனைப் பட்டா போன்ற அனைத்து வசதிகளையும் தனது நிதி மூலமும் பொது நிதி மூலமும் பலகோடிக்குச் செய்து, மக்கள் மத்தியில் எந்த ஒரு கெட்டப் பெயரும் இல்லாமல் இருந்துவருகிறார். சீனிவாசன்தான் மீண்டும், தொகுதியைத் தக்கவைக்க களம் இறங்க இருக்கிறார்.
அதுபோல், எதிர்க் கட்சியிலுள்ள தி.மு.க கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியான சி.பி.எம் மூன்று முறை இத்தொகுதியைத் தக்கவைத்ததன் மூலம், தொடர்ந்து பாலபாரதி எம்.எல்.ஏ.வாக இருந்திருப்பதால், மீண்டும் இத்தொகுதியை எங்களுக்குத்தான் கொடுக்க வேண்டும் என சி.பி.எம் கட்சியினர் தீவிரமாகக் கேட்டு வருகிறார்கள். அதோடு புது வாக்காளர்கள் சேர்க்கும் பணியிலும் களம் இறங்கி வருகிறார்கள். இருந்தாலும் மாவட்டத்தின் தலை நகரான இத்தொகுதியை கூட்டணிக்கு கொடுக்கக் கூடாது தி.மு.க.தான் போட்டிப்போட வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலினிடமும், முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியிடமும், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமாரிடமும் உ.பி.கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
கடந்த நான்கரை வருடங்களாக, எங்கள் அமைச்சர் சீனிவாசன் தொகுதி மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து கொடுத்திருக்கிறார். அதோடு தொகுதியில் உள்ள கட்சிக்காரர்கள் மற்றும் பொதுமக்களின் வீடுகளில் நடக்கும் நல்லது கெட்டதிலும் கலந்துகொண்டு வருகிறார். கரோனா நிவாரண உதவியாக, தொகுதியில் உள்ள 1 லட்சத்து 15 ஆயிரம் ரேஷன் கார்டுக்கு, 5 கிலோ அரிசியும், பலசரக்குப் பொருட்களையும் அமைச்சர் சீனிவாசனும் அவருடைய மகன்களான ராஜ்மோகன், வெங்கடேஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் நேரடியாகவே மக்களைச் சந்தித்துக் கொடுத்ததன் மூலம், மக்கள் மத்தியிலும் நல்ல பெயர் எடுத்திருக்கிறார்.
மாநரில் உள்ள 48 வார்டுகளை, நான்கு பகுதியாகப் பிரித்து, 12 வார்டுக்கு ஒரு பகுதிச் செயலாளர் என நான்கு பகுதிச் செயலாளர்களை நியமித்து இருப்பதன் மூலம், கட்சிப் பணிகள் தொய்வில்லாமல் இருந்துவருகிறது. இதேபோல் ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து, மேற்கு ஒன்றியச் செயலாளராக அமைச்சர் சீனிவாசனின் தம்பி மகனான ராஜசேகரனை நியமித்ததின் பேரில், கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டிக்கொண்டு மக்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துகொண்டு கட்சியைப் பலப்படுத்தி வருகிறார்.
தற்போது புதிய உறுப்பினர் சேர்க்கும் பணியில்கூட அமைச்சர் மகனான ராஜ்மோகன் டவுன் பகுதிகளையும், ராஜசேகர் ஒன்றியப் பகுதிகளிலும் உறுப்பினர்களைச் சேர்த்து வருவதால், நகரம் முதல் ஒன்றியம் வரை கட்சியும் வலுவாக இருக்கிறது. அதனால், எங்கள் அமைச்சர் சீனிவாசனை எதிர்த்து தி.மு.க.வில் ஐ.பி.செந்தில்குமார் போட்டி போட்டாலும் சரி அல்லது கூட்டணிக் கட்சியான சி.பி.எம் போட்டி போட்டாலும் சரி, வெற்றி பெற முடியாது. அந்தளவுக்கு இத்தொகுதியை அ.தி.மு.க கோட்டையாக உருவாக்கியிருக்கிறோம் என்றனர் ஒன்றியப் பொறுப்பில் உள்ள சில ர.ர.க்கள்
இது சம்பந்தமாக மாநகரப் பொறுப்பில் உள்ள உ.பி.கள் சிலரிடம் கேட்ட போது, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் 4 சட்டமன்றத் தொகுதிகளை தி.மு.க கைப்பற்றியதன் மூலம், திண்டுக்கல் மாவட்டம் தி.மு.க கோட்டையாக இருந்துவருகிறது. மாவட்டத்தின் தலைநகரமான திண்டுக்கல் தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்குக் கொடுக்கக் கூடாது என்பதற்காகத் தான், கடந்த மாதம் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தொகுதி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட நகரச் செயலாளர் ராஜப்பாவும், ஒன்றியச் செயலாளர் நெடுஞ்செழியனும், வரும் சட்டமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்கவேண்டும். அதிலும், வேட்பாளராக மாவட்டச் செயலாளரான ஐ.பி.செந்தில்குமாரை வேட்பாளராகப் போட்டால்தான் வெற்றி பெற முடியும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.
ஐ.பி.செந்தில்குமார், பழனி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருப்பதால் அந்தத் தொகுதியை விட்டுவிட்டு, இங்கே போட்டிபோட வேண்டும் என்று எங்களைப்போல் உள்ள கட்சிப் பொறுப்பாளர்களும் விரும்புகிறார்கள். இத்தொகுதியைப் பொருத்தவரை ஒன்றியம்தான் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கும். அதையும் கடந்த உள்ளாட்சித் தேர்தல் மூலம் உடைத்து தி.மு.க.வுக்கு சாதகமாக கொண்டுவந்ததுடன் மட்டுமல்லாமல், யூனியனையும் கைப்பற்றி இருக்கிறோம்.
அதுபோல், ஐ.பி அமைச்சராக இருந்தபோது, தொகுதிக்கு குடிநீர் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்ததின்மூலம் நகர மக்கள் மனதில் இடம் பிடித்தார். கட்சியும் வளர்ந்தது. மாநகரில் முன்னாள் நகர்மன்றத் தலைவர்களான பசீர் அகமது மற்றும் நடராஜன் ஆகியோர் நகரப் பொறுப்பாளர்களாக இருந்தபோது, கட்சி வளர்ச்சியும் வலுவாக இருந்தது. அதன்பின், நகரச் செயலாளராக ராஜப்பாவை நியமித்ததன் பேரிலும் கட்சி வளர்ச்சிக்குப் பாடுபட்டுவருகிறார். ஆளும் கட்சிபோல் தி.மு.கவிலும் 48 வார்டுகளை நான்கு பகுதிகளாகப் பிரித்து, கட்சிப் பொறுப்பாளர்களை உடனடியாக நியமித்து கட்சியைப் பலப்படுத்த எங்கள் முன்னாள் அமைச்சர் ஐ.பி.யும், மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமாரும் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதன் மூலம்தான் வரும் தேர்தலில் அமைச்சர் சீனிவாசனை எதிர்த்து ஐ.பி.செந்தில்குமார், போட்டியிடுவதன் மூலம் வெற்றி பெறமுடியும் என்று கூறினார்கள்.
திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் களமூம் சூடுபிடித்துவருகிறது.