தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதலமைச்சர் சார்பில், குற்றவியல் வழக்கறிஞர் ஜி. தேவராஜன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் கடந்த மாதம் 14 ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பத்திரிகையாளர் சந்திப்பில் முதலமைச்சருக்கு எதிராக எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அண்ணாமலை கருத்துகளை வெளியிட்டுள்ளார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்ணாமலை வெளியிட்டுள்ள கருத்துகள் பொய்யானது மட்டுமல்லாமல் முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் வழக்கறிஞர் தேவராஜ் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த வித ஆதாரமும் இல்லாமல் மக்கள் நலனுக்காக செயல்படும் முதலமைச்சர் மீது அவதூறு பரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி விசாரணையை 8 வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.