கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றிய ஆணையராக இருப்பவர் சங்கர். இவரை கண்டித்து மக்கள் பாதை இயக்கம், சட்ட பஞ்சாயத்து இயக்கம், சிறு குறு விவசாயிகள் சங்கம், இப்படி பல்வேறு அமைப்பினர் சேர்ந்து 26-ம் தேதி திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
மங்களூர் ஒன்றிய ஆணையரை கண்டித்து ஏன் இந்த போராட்டம் என்று அவர்களிடம் நாம் கேட்டபோது, மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் ஒன்றியத்தின் மூலம் நடைபெறும் திட்டப் பணிகளில் பல்வேறு குறைபாடுகள் மோசடிகள் நடந்து வருகின்றது. இது குறித்து வாட்ஸ் அப் குழுக்களில் மேற்படி இயக்கத்தினர் அவரவர் பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதித்து வந்துள்ளனர். இதை மங்களூர் ஒன்றிய ஆணையர் சங்கர் வாட்ஸ் அப் குழுக்களில் வரும் தகவல்களை பார்த்துள்ளார். இதையடுத்து மேற்படி இயக்கத்தினருடன் விவாதித்துள்ளார். அப்போது சட்ட பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த ராமநத்தம் கோவிந்தசாமி, மக்கள் பாதை இயக்கத்தைச் சேர்ந்த புதுக்குளம் ரமேஷ் ஆகியோரை ஆணையர் சங்கர் ராம நத்தத்தில் உள்ள சமுதாய கூடத்திற்கு கடந்த 24 ஆம் தேதி காலை 11 மணிக்கு நீங்கள் வாருங்கள், நீங்கள் சுட்டிக்காட்டும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கத் தயார், நீங்கள் என்னிடம் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் தர தயாராக இருக்கிறேன் இந்த விவாதத்திற்கு நான் தயார் என்று சவால்விட்டு அழைத்துள்ளார்.
அதை ஏற்று கோவிந்தசாமியும் ரமேஷும் ஆணையர் கூறியபடி ராமநத்தம் சமுதாய கூடத்துக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கே கரோனா விழிப்புணர்வு சம்பந்தமாக 30க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களை அழைத்து கூட்டம் நடத்தி வந்தார். இந்தக் கூட்டத்தில் பெண் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள், மகன்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். தமிழக அரசு பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் நேரடியாக சென்று அரசு நிகழ்ச்சிகள், திட்டப்பணிகள் குறித்து ஆய்வுகள், ஊராட்சி நடத்தும் கூட்டங்கள் அனைத்திலும் அவர்கள் கலந்து கொள்ள வேண்டும், அவர்களுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் உறவினர்களும் கலந்து கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
ஆனால் அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டுவிட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையர் சங்கர் பெண் தலைவர்களின் கணவர்களையும் அவர்களது மகன்களையும் வைத்து கூட்டம் நடத்தியுள்ளார். அந்த கூட்டம் முடிந்ததும், தலைவர்கள் கிளம்பி வெளியே வந்துள்ளனர்.
அப்போது கோவிந்தசாமி, ரமேஷ் ஆகிய இருவரும் ஆணையர் சங்கரை சந்தித்து, 'எங்களை அழைத்துள்ளதை ஏற்று இங்கு வந்துள்ளோம்' என்று கூறியுள்ளனர். உடனே ஆணையர் சங்கர் வெளியே சென்ற ஊராட்சிமன்றத் தலைவர்கள் அனைவரையும் உள்ளே அழைத்து அமர வைத்துள்ளார். அப்போது கோவிந்தசாமி ரமேஷ் இருவரும், தாங்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு தாங்கள் தான் பதில் கூறுவதாக கூறி உள்ளீர்கள். அப்படி இருக்கும்போது ஊராட்சி மன்றத் தலைவர்களை இங்கு ஏன் திரும்ப அழைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு ஆணையர் சங்கர், நாம் விவாதிக்கும் போது அவர்கள் பார்வையாளர்களாக இருப்பார்கள். அவர்கள் எதுவும் பேசமாட்டார்கள் என்று கூறியுள்ளார். சரி என்று கோவிந்தசாமி, ரமேஷ் இருவரும் ஆணையரிடம் கிராம பணிகள் குறித்து கேள்விகளை கேட்டதும், ஆணையர் சங்கர் மௌனமாக இருக்க, ஊராட்சிமன்றத் தலைவர்கள் ரமேஷ், கோவிந்தசாமி ஆகியோரிடம் எங்கள் கிராம பிரச்சினைகள் குறித்து கேள்வி கேட்பதற்கு நீங்கள் யாரென்று தகராறு செய்ய ஆரம்பித்தனர்.
அப்போது சத்தமில்லாமல் ஆணையர் சங்கர், தனது அலுவலக வாகனத்தில் ஏறி சென்றுவிட்டார். ஊராட்சி மன்றத் தலைவர்கள், சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோவிந்தசாமி, மக்கள் பாதை இயக்கம் ரமேஷ் ஆகியோருக்கும் இடையில் திட்டமிட்டு தகராறு மூட்டி விட்டு விட்டு ஆணையர் சங்கர் சொல்லாமல் கொள்ளாமல் சென்றுவிட்டார். இவர்கள் இருவரும் தலைவர்களிடம் சிக்கிக் கொண்டனர். உங்களிடம் விவாதிக்க நாங்கள் வரவில்லை. அதிகாரி அழைத்ததால் வந்தோம் என்று காரசாரமாகப் பேசி விட்டு வெளியே வந்துள்ளனர். பெரும் தகராறு ஏற்படும் சூழ்நிலை அப்போது ஏற்பட்டுள்ளது.
மக்கள் பிரச்சினைகளை, அரசின் கிராமப்புற திட்டங்களை முறையாக செய்ய வேண்டும். ஏன் செய்யவில்லை என்று கேள்வி கேட்க சென்ற எங்களை ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஏவி விட்டு எங்கள் மீது தாக்குதல் நடத்த ஏற்பாடு செய்த ஆணையர் சங்கர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதற்காகவே தான் இந்த முற்றுகைப் போராட்டம் என்று போராட்டத்தில் கலந்துகொண்ட சட்ட பஞ்சாயத்து இயக்க கோவிந்தசாமி, மக்கள் பாதை இயக்கம் ரமேஷ் சிறு குறு விவசாயிகள் சங்கத்தலைவர் தயா பேரின்பன் ஆகியோர் நம்மிடம் கூறினார்கள்.
தர்ணா போராட்டம் நடத்தியவர்களிடம் திட்டக்குடி காவல் துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து போராட்டத்தை நடத்தியவர்கள் திட்டக்குடி வட்டாட்சியர் செந்தில்வேல், சமூகநல வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ஆகியோரை சந்தித்து ஆணையர் சங்கர் குறித்து புகார் மனு அளித்துள்ளனர். வட்டாட்சியர்கள் இருவரும் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மக்கள் பாதை இயக்க ரமேஷ், சட்ட பஞ்சாயத்து இயக்க கோவிந்தசாமி மற்றும் பல்வேறு இயக்கத்தை சேர்ந்தவர்கள் தர்ணா போராட்டத்தின் போது கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து ஆணையர் சங்கரிடம் கேட்டோம். பல இயக்கத்தின் பெயர்களை சொல்லி சிலர் அரசு திட்ட பணிகள் நடப்பதில் முறைகேடுகள் என பொய்யாகக் கூறி மிரட்டி கமிஷன் கேட்கிறார்கள். மேற்படி நபர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து சம்பந்தப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த தலைவர்கள் பதில் கூறட்டும் என்றுதான் அவர்களை வரவழைத்தேன். மற்றபடி அவர்கள் கூறுவது போன்று ஒன்றிய திட்டப்பணிகளில் தவறுகள் ஏதும் நடக்கவில்லை. இந்த ஒன்றியத்தில் பல்வேறு இயக்கத்தை கூறி ஊராட்சிமன்ற தலைவர்களிடமும் ஒன்றிய அலுவலர்களிடமும் திட்டப் பணிகளில் குறை இருப்பதாகக் கூறி மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்கிறார்கள் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டினார் சங்கர்.
இது குறித்து மக்கள் பாதை இயக்க ரமேஷ், சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கோவிந்தசாமி ஆகியோர் நம்மிடம், நாங்கள் தவறு செய்திருந்தால் காவல்துறையில் புகார் கூறி எங்கள்மீது நடவடிக்கை எடுக்க சொல்லியிருக்கலாம் அல்லவா. அப்படிப்பட்ட இயக்கம் எங்களுடையது அல்ல. நாங்களும் அப்படிப்பட்டவர்கள் அல்ல. லஞ்சம் தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து என்ற கொள்கையோடு மக்களுக்காக பணி செய்து வருகிறோம். ஒன்றிய பணிகளில் நடந்துள்ள முறைகேடுகள், ஊராட்சி கணக்கு வழக்குகளை முறையாக பராமரிக்காத பல ஊராட்சிகள் உள்ளன. அதன் சட்டதிட்டங்களை யாரும் செயல்படுவதில்லை. அதை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இதுபோன்று பல்வேறு தகவல் குறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் சங்கர் எங்களிடம் விவாதம் நடத்துவதாக வரவழைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் தூண்டிவிட்டு மோதவிட்டு பார்க்கிறார். இவரிடம் மட்டுமல்ல வேறு எந்தஉயர் அதிகாரியிடமும் நேருக்குநேர் விவாதிக்கத் தயார். அவர்கள் எங்களுக்கு பதில் கூறட்டும். எங்கள் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் அவர்கள் செய்யும் தவறுகளை மறைக்க ஊராட்சி மன்றத் தலைவர்கள் தூண்டிவிட்டு மோத பார்க்கிறார்கள். தகுந்த ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. தவறு செய்த அதிகாரிகள் தண்டனை பெறுவதற்கு அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க உள்ளோம் என்றார்கள் மக்கள் பாதை இயக்க ரமேஷ் சட்ட பஞ்சாயத்து இயக்க கோவிந்தசாமி ஆகிய இருவரும்.