தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடைபெற்ற முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலில் சில வார்டுகளில் வேட்பாளர்கள் சின்னம் மாறியதால் பதற்றம் ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்தில் முதல் கட்டமாக 31 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் 22 ஒன்றிய கவுன்சிலர்களுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றது. இதில் பாவக்கல்,நடுப்பட்டி ஊராட்சிகளில் 21 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் சாந்திவேங்கன், திமுக சார்பில் ரத்தினபதி, சுயேட்சை வேட்பாளர்கள் லட்சுமி செல்வம், லலிதாமகாராஜன், உட்பட 5 வேட்பாளர்கள் போட்டியில் இருந்தனர். இதில் லலிதாமகாராஜனுக்கு கைப்பை சின்னம் ஒதுக்கப்பட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் இன்று பாவக்கல் ஊராட்சி வாக்கு வாக்கு சாவடி மையத்தில் வேட்பாளர் லலிதா மகாராஜன் சென்று பார்த்த போது கை பை சின்னத்துக்கு பதிலாக பெண்கள் கைப்பை இருந்ததால் அதிருப்தி அடைந்தார். பிறகு தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அரை மணி நேரம் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு அவரது சகோதரர்கள் அர்ஜீன், ராஜேந்திரன் இருவர் தீ குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு சிங்காரப்பேட்டை போலீசார், டி.எஸ்.பி. ராஜபாண்டி பிரச்சனையை சீர்செய்தனர்.
இதே போல தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி 5 வார்டில் மூன்று வேட்பாளர்கள் போட்டியிடும் இந்த கவுன்சிலர் பதவியில் காங்கரஸ் கட்சி வேட்பாளர் நாகராஜ் போட்டியிடும் கை சின்னத்திற்கு பதிலாக உதய சூரியன் சின்னம் மாற்றப்பட்டது. இங்கு திமுக போட்டியிடாத நிலையில் , அந்த சின்னத்தை மாற்றினால் அந்த வாக்கு செல்லாமல் போகும் என்ற நிலையில் கூட்டணி சின்னத்தை வைத்தே செல்லா ஓட்டாக மாற்றும் எண்ணத்தில் தான் திட்டமிட்டு செய்துள்ளனர் என்று வேட்பாளர் நாகராஜ் குற்றம் சாட்டினார். இதனால் பிரச்சனை வெடிக்க ஆரம்பித்த நிலையில் அந்த பெட்டியை மட்டும் தனியாக எடுத்து சீல் வைத்து பின்னர் அதை சரிசெய்து மீண்டும் வாக்கு பதிவை தொடங்கினர்.